
இந்திய அணியில் அனைத்து காலத்திற்குமான சிறந்த வீரர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட்டின் பெயர் நிச்சயமாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு மிகப்பெரும் தூணாக இருந்தவர் டிராவிட். பல நேரங்களில் விக்கெட்டுகள் சரியும் போது, இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளார். டிராவிட் தடுப்பாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது எப்படி என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.
இந்திய அணியின் ‘தடுப்புச் சுவர்’ என்று அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட். டெஸ்ட் கிரிக்கெட்டில் டிராவிட்டின் விக்கெட் எதிரணிகளுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. பந்து வீச்சாளர் 150 கிமீ வேகத்தில் பந்து வீசினாலும், அதனைத் தடுத்தாடும் அபாரமான திறன் இவரிடம் உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஷேவாக், சச்சின் மற்றும் கங்குலி விக்கெட்டுகளை விடவும் அதிக மதிப்பு வாய்ந்த விக்கெட்டாக எதிரணிகள் கருதியது டிராவிட்டின் விக்கெட்டைத் தான். டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 270 ரன்களைக் குவித்துள்ளார் டிராவிட்.
இன்றைய இளம் வீரர்கள் அதிரடியைக் கையாண்டு வருவதால், டெஸ்ட் போட்டிகளில் தடுப்பாட்டத்தில் தடுமாறுகின்றனர். டெஸ்ட் போட்டியை எப்படி விளையாட வேண்டும் என்று உலகிற்கே உணர்த்திக் காட்டிவர் டிராவிட் என்றால், அது மிகையாகாது. ராகுல் டிராவிட் கிரிக்கெட்டில் அறிமுகமான போது எல்லோரையும் போலவே விளையாடி வந்தார். ஷேவாக், கங்குலி மற்றும் சச்சின் போன்ற வீரர்களைப் போல அதிரடியாக விளையாடவும் முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்கான பலன் அவருக்கு கிடைக்கவில்லை. மாறாக, எளிதில் விக்கெட்டைப் பறிகொடுத்து ரன் குவிக்கவும் தடுமாறினார்.
இதில் தக்க பாடத்தைக் கற்றுக் கொண்ட டிராவிட், மற்ற வீரர்களைப் போல் நான் ஏன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என சிந்தித்தார். அதிலிருந்து அவருடைய இயல்பான ஆட்டம் வெளிப்பட்டது. தனக்கு எது சிறப்பாக வருமோ அதனைக் கையிலெடுத்த டிராவிட், தடுப்பாட்டத்தை ஆடத் தொடங்கினார். தடுப்பாட்டத்தில் தன்னை மேம்படுத்திக் கொண்ட பின்பு, அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. விக்கெட்டுகள் வீழ்ந்தால் என்ன, டிராவிட் களத்தில் இருந்தால் ஆட்டம் எப்போது வேண்டுமானாலும் இந்திய அணிக்கு சாதகமாகத் திரும்பும் என மற்ற இந்திய வீரர்களும், ரசிகர்களும் அவரை முழுமையாக நம்பினர். அதற்கேற்ப பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் டிராவிட். அதோடு இந்திய அணி தோல்வி அடைய வேண்டிய பல போட்டிகளை டிராவும் செய்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் டிராவிட். இந்த வாய்ப்பு இவருக்கு கிடைத்தது கூட மிகவும் ஆச்சரியமானது தான். ஏனெனில் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு காயம் ஏற்படவே, டாஸ் போடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தான் ராகுல் டிராவிட் விளையாடப் போவது உறுதியானது.
ஒரு காலத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பற்றாக்குறையை போக்கியவரும் டிராவிட் தான். இவர் சிறிது காலம் இந்திய அணிக்கு கேப்டனாகாவும் செயல்பட்டுள்ளார்.