இந்திய அணி டூ ராஜஸ்தான் ராயல்ஸ்: டிராவிட்டின் வெற்றிப்பயணம் தொடருமா?

Rahul Dravid
Rahul Dravid
Published on

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து வெளியேறிய பின், ராகுல் டிராவிட் தற்போது மீண்டும் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். ஆம், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்பட இருக்கிறார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவர் ராகுல் டிராவிட். இவர் ஒரு வீரராக தனது மிகச்சிறந்த பங்களிப்பை இந்திய அணிக்கு கொடுத்திருக்கிறார். ஒரு காலகட்டத்தில் விக்கெட் கீப்பர்களுக்கான வெற்றிடத்தை நிரப்பியவரும் இவரே. சில ஆண்டுகள் இந்திய அணிக்குத் தலைமையேற்று வழிநடத்தியும் வந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் “இந்திய அணியின் தடுப்புச் சுவர்” என்று உலகெங்கும் பாராட்டப்பட்டவர் டிராவிட். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தனது அபாரமான தடுப்பாட்டத்தால் எதிரணியை கதிகலங்கச் செய்தவர். ராகுல் டிராவிட்டும், விவிஎஸ் லக்ஸ்மனனும் ஒன்றாக சேர்ந்து பல டெஸ்ட் போட்டிகளில் எதிரணிக்கு சிரமத்தைக் கொடுத்தது எல்லாம் காலத்தின் பக்கங்களில் அழியாமல் நிலைத்து நிற்கின்றன.

ராகுல் டிராவிட் தனது கிரிக்கெட் பயணத்தில் ஒரு வீரராக ஐசிசி கோப்பையை வென்ற அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும், ஒரு பயிற்சியாளராக ஐசிசி கோப்பையை வென்று விட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக்கோப்பையில் இறுதிப்போட்டி வரைச் சென்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது. ஆனால், நடப்பாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை தன்வசப்படுத்தி பல ஆண்டு கோப்பைக் கனவை நனவாக்கியது. இந்திய அணிக்கு மட்டுமல்ல பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் இது மிகச் சிறந்த தருணமாக அமைந்தது.

தனது கிரிக்கெட் பயணத்தில் ஒரு ஐசிசி கோப்பையைக் கூட கையில் ஏந்தவில்லை என்ற டிராவிட்டின் ஏக்கமும் முடிவுக்கு வந்தது. கோப்பையை வென்றக் கையோடு பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வர, அடுத்த தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றார். ஆனால், இன்னமும் கூட டிராவிட்டின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வரவில்லை. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு சாதாரண பேட்டராக தொடங்கிய தனது கிரிக்கெட் பயணத்தில் விக்கெட் கீப்பர், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என பலத் துறைகளில் தனது திறமையை நிரூபித்து விட்டார் ராகுல் டிராவிட். இவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற போது, மற்ற அணிகளின் முன்னாள் வீரர்கள், தங்கள் அணி வீரர்களிடம் இந்திய அணியிடம் கவனமாக இருங்கள்; ஏனெனில் திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த டிராவிட்டின் அணுகுமுறை உங்களை எளிதாக வீழ்த்தி விடும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் மோதவிருக்கும் இந்தியா பாகிஸ்தான்: எப்போ தெரியுமா?
Rahul Dravid

பயிற்சியாளர் பதவியில் அடுத்த பரிணாமத்திற்கு சென்றிருக்கும் டிராவிட், ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு இருக்கிறார். ஆகையால் ராஜஸ்தான் அணி இவருக்கு புதிதல்ல. ஏற்கனவே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த குமார் சங்கக்காரா விலகிய நிலையில் ராகுல் டிராவிட் புதிய தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார். முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதற்கு பிறகு கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட்டணியில் ராஜஸ்தான் அணி கோப்பையைக் கைப்பற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com