கால்பந்து உலகில் இளம் வீரர்கள் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடிக்க முயல்கிறார்கள். அவ்வரிசையில் தற்போது ஸ்பெயின் அணியில் உருவெடுத்துள்ள இளம் புயல் லாமின் யமல் குறித்து விளக்குகிறது இந்தப் பதிவு.
உலகம் முழுக்க பிரபலமான மற்றும் அதிகளவிலான ரசிகர்களைக் கொண்ட விளையாட்டுகளில் கால்பந்துக்கு என்று தனியிடம் இருக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு கால்பந்து தொடர்கள் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு தொடரிலும் அசாத்தியமான ஒரு கோல் பேசுபொருளாக மாறுவதோடு, இளம் வீரர்களும் கண்டறியப்படுவார்கள். அவ்வகையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் அசத்தியுள்ளார் ஸ்பெயின் அணியின் இளம் வீரர் லாமின் யமல்.
கால்பந்து உலகை ஆட்சி செய்யும் மெஸ்ஸி மற்றும் ரோனால்டோ போன்ற நட்சத்திர வீரர்களின் காலகட்டத்தில் 17 வயதே நிரம்பிய ஒரு வீரர் பேசுபொருளாக மாறியிருக்கிறார் என்றால், அது அசாத்தியமான சாதனையல்லவா! ஸ்பெயின் அணிக்காக யூரோ கோப்பை 2024-ல் களமிறங்கிய லாமின் யமல், அரையிறுதியில் அடித்த கோல் தான் நடப்புத் தொடரில் அசாத்தியமான கோலாக பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் அணியுடனான அரையிறுதியில் 1-0 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த ஸ்பெயின் அணிக்கு அசாத்தியமான முறையில் ஒரு கோல் அடித்து நம்பிக்கையை ஊட்டினார் யமல். பின், 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின், இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தையும் வென்று யூரோ கோப்பையை 4வது முறையாக கைப்பற்றி அசத்தியது. இத்தொடரில் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற விருதைப் பெற்றார் லாமின் யமல். தனது ஆரம்ப காலத்திலேயே மிகப்பெரிய விருதை வாங்கியது மட்டுமின்றி, உலகத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளார் யமல். இவர் அடித்த கோலைப் பார்த்து ஒரு புதிய கால்பந்து சூப்பர்ஸ்டார் பிறந்து விட்டார் என இங்கிலாந்தின் முன்னணி வீரர் வினேக்கர் புகழாரம் சூட்டினார்.
சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இன்று ஸ்பெயின் அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார் என்றால், அவரது கடின உழைப்பு எத்தகையது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். ஸ்பெயினில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த ஷீலா எபனா மற்றும் பெயிண்டராக வேலை பார்த்த மவுனிர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்த லாமின் யமல், சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டால் ஈர்க்கப்பட்டார். சிறுவயதில் தந்தையை பிரியும் சூழலில் தாய் மற்றும் அருகில் இருந்த கால்பந்து மைதானத்தின் துணையுடன் தனது வாழ்க்கையை நகர்த்தினார். 13 வயதில் யமலின் ஆட்டத்தைக் கண்டு வியப்புற்ற அவருடைய பயிற்சியாளர், 15 வயதிலேயே சர்வதேச போட்டிகளில் விளையாட உதவியாக இருந்தார்.
ஏழ்மையை வென்று தற்போது ஸ்பெயின் கால்பந்து அணியில் முக்கிய வீரராக இடம் பிடித்திருக்கும் லாமின் யமல், இனி வரும் காலங்களில் பல்வேறு சாதனைகளைப் புரிவார் என்பதில் ஆச்சரியமில்லை. மெஸ்ஸி, ரோனால்டோ வரிசையில் யமலும் இடம் பிடிப்பார் என்று பல்வேறு கால்பந்தாட்ட விமர்சகர்களும் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தேசத்திற்காக விளையாடும் வாய்ப்பை வெகு விரைவிலேயே பெற்று விட்ட லாமின் யமலுக்கு வாழ்த்துகள்.