சதுரங்க சேம்பியன் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்!

Grandmaster Gukesh
Grandmaster Gukesh

நமது உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள உணவுகள் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு விளையாட்டும் முக்கியமாகும். விளையாடினால் அதிகப்படியான வியர்வை வெளியேறி, உடல்நலம் காக்கும். இன்றைய இளைஞர்களிடத்தில் விளையாட்டு என்றால் உடனே நினைவுக்கு வருவது கிரிக்கெட் தான். ஆனால், கிரிக்கெட்டை தவிர பல விளையாட்டுகள் உள்ளன. ஒவ்வொரு விளையாட்டிலும் பல வீரர்கள் தினந்தினம் சாதித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில், அமர்ந்த இடத்தில் இருந்தே மூளையைப் பயன்படுத்தி எதிராளியை வீழ்த்தும் சதுரங்க விளையாட்டும் தற்காலத்தில் பிரபலமாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் 5 முறை உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இளம் வீரர்களான பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோரின் பெருமிதத்துக்குரிய சாதனைகள்!

செஸ் விளையாட்டின் மீதான அதீத ஆர்வத்தால் உலகின் பார்வையை தன்மீது விழச் செய்துள்ளார் சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ். அப்படி இவர் என்ன செய்தார்? இவர் கடந்து வந்த பாதை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிங்காரச் சென்னையில் வசித்து வரும் குகேஷ் வேலம்மாள் பள்ளியில் படித்து வருகிறார். முதலில், பள்ளிப் பருவத்தில் செஸ் விளையாட்டை பொழுதுபோக்கிற்காக விளையாடத் தொடங்கினார். கடந்த 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கோலாகலமாய் நடைபெற்ற ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தான், இவருடைய திறமை பெற்றோர்களுக்கே புரிந்தது. இந்த வெற்றி தான் குகேஷின் செஸ் விளையாட்டின் பயணத்தையே மாற்றி அமைத்தது. அதனைத் தொடர்ந்து, பல சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய குகேஷிற்கு, கிராண்ட் மாஸ்டர் விஸ்வாநாதன் ஆனந்த் மெண்டர் ஆக திகழ்ந்தார்.

Grandmaster Gukesh
Grandmaster Gukesh

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்:

மகனின் திறமைக்கு மதிப்பளித்து, அவரை ஊக்குவிக்க தனது மருத்துவர் வேலையை துறந்து விட்டு மகனுக்கு துணை நின்றார் குகேஷின் தந்தை ரஜினிகாந்த். இவரின் தாயார் பத்மா நுண்ணுயிரியலாளராக பணி செய்து வருகிறார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு குகேஷிற்கு 2019 ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தது. இதன்படி, இந்தியாவின் முதல் இளம் கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தை பெற்றார் சென்னையைச் சேர்ந்த குகேஷ். மற்றொரு சாதனை செஸ் வீரரான பிரக்ஞானந்தா 2018 ஆம் ஆண்டே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றிருந்தார். இருப்பினும், அப்போது பிரக்ஞானந்தாவின் வயது 12 ஆண்டுகள் 10 மாதங்கள் 13 நாட்கள் ஆகும். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் போது குகேஷின் வயது 12 ஆண்டுகள் 7 மாதங்கள் 17 நாட்கள் ஆகும். ஆகையால் 3 மாத காலம் வித்தியாசத்தில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டதை தட்டிச் சென்றார் குகேஷ்.

முதல் இடம்:

2023 செப்டம்பருக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச செஸ் சம்மேளனம் (FIDE) வெளியிட்ட போது, 2,758 புள்ளிகளுடன் செஸ் வீரர்களில் இந்தியாவின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் 17 வயதாகும் குகேஷ். இதுவரையில், இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராகத் திகழ்ந்த 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த்தை வெறும் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முந்தினார் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்.

2024 கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்:

கனடாவில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் சாம்பியனை முடிவு செய்யும் இறுதி போட்டியின் கடைசி சுற்றில், இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், அமெரிக்காவைச் சேர்ந்த நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவருமே தலா 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகளைக் கொண்ட இறுதிப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். அமெரிக்க செஸ் வீரர் நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இதையும் படியுங்கள்:
IPL ஆட்டமா? அதிரடி ஆட்டமா?
Grandmaster Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரை வென்றதன் மூலம், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சீனாவின் டிங் லிரெனை எதிர்கொண்டு விளையாட குகேஷ் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் தொடரை வென்றதால், இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரை வென்ற நபர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இந்தியாவின் மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு, கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் ஆவார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற எயிம்செஸ் ரேபிட் போட்டியில், உலக சாம்பியனாக இருக்கும் கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ் விளையாட்டில் குகேஷிற்கு இருக்கும் தீர்ந்திடாத ஆர்வமே, அவரின் வெற்றிப் பயணத்திற்கு முக்கிய காரணமாகும். மென்மேலும் இவரது வெற்றிப் பயணம் தொடர்ந்து பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com