

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், மிகச் சிறந்த அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங், 2027- ல் நடைபெற உள்ள ஒருநாள் உலகைக் கோப்பை தொடரில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கு தனது ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங்கின் இந்த ஆலோசனைக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
யுவராஜ் சிங் கூறியதாவது, "வருகிற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால், தற்போதைய அணியில் மிகச் சிறந்த வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தொடர் வாய்ப்பு அளிக்க வேண்டும். கடந்த காலங்களில் இந்திய அணி தடுமாறியதற்கு முக்கிய காரணம், கடைசி நேரம் செய்யப்படும் மிகப்பெரிய மாற்றங்கள் தான். உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் , சிறந்த ஒரு அணியை உருவாக்கி, அவர்களை தொடர்ச்சியாக விளையாடுவதில் கவனம் செலுத்த வைக்க வேண்டும். இறுதி நேரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்யவே கூடாது
அணியில் 16 முதல் 20 வீரர்கள் வரை இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமான போட்டி அனுபவம் இருக்க வேண்டும். அந்த வீரர்கள் தேவையான அளவிற்கு ஒரு நாள் போட்டிக்கு அனுபவங்களை பெற்றிருக்க வேண்டும்," என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் , இந்திய அணி தடுமாறிய ஒவ்வொரு முறையும், போட்டித் தொடரின் இறுதியில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய மாற்றங்கள் முக்கிய காரணமாக உள்ளது. அதனால், 2027 உலக கோப்பையை வெல்ல முடியும், என்று நம்பும் அணியை இப்போதே உருவாக்கி வாய்ப்பு தர வேண்டும். அவர்கள் வெற்றி பெற்றாலும் தோல்வி பெற்றாலும், உலகக் கோப்பை தொடர் வரை அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் , என்று யுவராஜ் சிங் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில், தேர்வுக்குழு பல முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. இதில் அதிரடி ஆட்டக்காரரான ரோஹித் சர்மாவின் எதிர்காலம் பற்றிய முடிவும் இருக்கும். அணியில் ஆல்ரவுண்டர்களை விட மேட்ச் வின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு அணியில் 12, 13 அல்லது 14 வீரர்கள் கொண்ட , முக்கிய அணியை உருவாக்கலாம். 15-வது வீரரை போட்டிக்கு தகுந்தவாறு தேர்வு செய்யலாம். ஆனால் , போட்டியை வென்று கொடுக்கும் 11 வீரர்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
உதாரணம் கூறி விளக்கிய யுவராஜ் சிங், "ஆஸ்திரேலியா அணியில், போட்டியை மாற்றக்கூடிய பல மேட்ச் வின்னர்கள் இருந்தனர். அணி சரிவில் இருக்கும் போது அவர்களின் யாரேனும் ஒருவர், சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை மீட்டு வெற்றிக்கு கொண்டு சென்று விடுவார்கள். இந்திய அணி டி 20 போட்டிகளில் கடைபிடித்த அணுகு முறையை ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியில் பின்பற்ற வேண்டும், 2024 மற்றும் 2026 ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பைகளை இந்திய அணி வென்று காட்டியது.
2023-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்திய அணி விளையாடியது. முதலில் அரையிறுதிக்கு தகுதி பெற கவனம் செலுத்த வேண்டும் , அதைத் தொடர்ந்து 2 நாக்-அவுட் போட்டிகளில் வெல்ல வேண்டும். இவற்றை விட தற்போது எந்தச் சூழ்நிலையிலும் போராடி வெற்றி பெறக்கூடிய அணியை உருவாக்க வேண்டும்,” என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.