நம் தினசரி வாழ்வில் 50 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவை. ஆனால் அவற்றை பெறுவது கடினமானது. அதற்குப் பதிலாக 10 வகையான இந்த ஊட்டச் சத்துக்களை சேர்த்து கொண்டால் மற்ற 40 சத்துகளையும் சேர்த்து பெற்றது போல இருக்கும்! அவை என்னென்ன?
இரும்புச்சத்து, கால்சியம், கார்போஹைடிரேட், கொழுப்பு, துத்தநாகம், பைட்டோ கெமிக்கல்கள், புரதம், வைட்டமின்கள், ரிப்போபிளாவின், ஃபோலிக் அமிலம் ஆகிய இவை ஏன் அவசியம்? பார்ப்போம்...
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் தான் உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆக்ஸிஜனை ஒவ்வொரு உறுப்பிற்கும் கொண்டு செல்வது இது தான். அந்த வகையில் இரும்புச்சத்து போதுமான அளவு இருக்கும் போது தான் சிவப்பு அணுக்களின் உற்பத்தி சரியாக இருக்கும். பெரியவர்கள் ஒரு நாளைக்கு 8mg இரும்புச்சத்து உட்கொள்ள வேண்டும். கீரைகள், பருப்பு வகைகள், இறைச்சி, கோழி, மீன், முட்டை, கொட்டைகள், விதைகள், மற்றும் தானியங்கள் போன்றகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளது.
புரதம் நமது உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, உடலில் நோய் தொற்றுகளை எதிர்க்க, வெள்ளை அணுக்களை உருவாக்க புரதச்சத்து அவசியம். புரதம் தசைகளை வளர்க்கவும் பராமரிப்பதற்கும் உதவுகிறது. நம் தினசரி உணவில் கட்டாயம் 20 முதல் 30 கிராம் புரோட்டின் தேவைப்படுகிறது. பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள், பருப்பு வகைகள், முட்டை, இறைச்சி, மீன்,கோழி ஆகியவற்றிலுள்ளது.
உடலுடைய இயக்கத்திற்கு ரொம்ப முக்கியம், குறிப்பாக நம்முடைய எலும்புகள், பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் முக்கியம் தசைகள் வலிமையாக இருக்க ,நரம்புகளுக்கு ஓய்வு கொடுத்து தூக்கம் வர , காயங்களை விரைவில் ஆற்ற கால்சியம் முக்கியம். எல்லா கீரை வகைகளிலும் கால்சியம் நிறைந்துள்ளது. மேலும் பிரண்டை, கருப்பு எள், வேர்க்கடலை, கொண்டைக் கடலை, சோயா, மீன், இறைச்சி ஆகியவற்றிலும் கால்சியம் சத்து உள்ளது.
உடலுக்கு ஆற்றலை தர மாவுச்சத்து அவசியம். நாம் சாப்பிடும் உணவிற்கும் மனநலனிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். கார்போஹைட்ரேட்கள் எனும் மாவுப் பொருட்கள் மன அழுத்தத்தை குறைக்கும்; அதோடு மன அமைதியையும் தரும். தானிய உணவுகள் அனைத்தும் கார்போஹைட்ரேட் உணவு தான்.
உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு துத்தநாகம் அவசியம். இது குறைந்தால் சளி, சரும நோய்கள் அடிக்கடி ஏற்படும். ஆண்களின் விந்தணு உற்பத்தி, பெண்கள் கரு வளர்ச்சி, மழை மற்றும் குளிர்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க துத்தநாகம் தேவை. 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தினமும் 15 மி.கி. துத்தநாகம் தேவை. இவை முழு தானியங்கள், விதைகள், கொட்டை வகைகள் மற்றும் கடல் உணவுகளில் உள்ளது.
தாவரங்களில் இருக்கும் உயிர் கூறுகளை 'பைட்டோ கெமிக்கல்ஸ்' என்கிறார்கள். இவை தான் நோய்களை எதிர்க்கும் மூலப் பொருட்கள். முக்கியமாக 500 வகையான தாவர உயிர் கூறுகள் உள்ளன. எனவே சாப்பிடும் போது ஒரே காய், ஒரே பழம் என்று சாப்பிடாமல் தினமும் வேறு வேறு சாப்பிட, தாவர உயிர் கூறுகள் நிறைய கிடைக்கும். பாகற்காய், திராட்சை, தக்காளி, கத்திரிக்காய் சோயா, ஆப்பிள் போன்றவற்றில் அதிக தாவர உயிர் கூறுகள் இருக்கின்றன.
சருமம், இணைப்பு திசு, கண்கள், சளி சவ்வுகள், நரம்பு மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு போன்ற உடல் திசுக்களின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு ரிபோஃப்ளேவின் மிகவும் அவசியம். கூடுதலாக, இனப்பெருக்க உறுப்புகளின் சரியான வளர்ச்சிக்கும் உதவும். பால், பால் பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன், பச்சைக் காய்கறிகள், கொட்டைகள் மற்றும் தானியங்கள் போன்றவற்றில் ரிபோஃப்ளேவின் அதிகமுள்ளது.
உடலில் உள்ள ரத்தம் மற்றும் தசைநார்களை வலுப்படுத்தவும், உடலுக்கு ஆற்றலை அளிக்கும் உயிர்ச்சத்துக்கள் கரையவும் கொழுப்பு சத்து அவசியம். இது நூறு மில்லி ரத்தத்தில் 40-60 மிகி வரை இருப்பது நல்லது. இந்த அளவு 30 மிகிக்கும் குறையும் போது இதயநோய் வரக் காரணமாகலாம். உடலில் நல்ல கொழுப்பு அதிகமாக இருப்பதால் இதயம் பலப்படும். இதனை அதிகரிக்க உடற்பயிற்சிகள் உதவும். இவை வெண்ணெய் நெய், முட்டை, மீன், எண்ணெய் வித்துக்களில் உள்ளது.
உடலுக்கு சிறிய அளவில் தேவைப்படும் கரிம சேர்மங்கள் ஆகும். ஒவ்வொன்றும் ஆரோக்கியம், உடல் செயல்பாட்டையும் பராமரிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு வைட்டமினும் ஒவ்வொரு உடல் உறுப்பின் நலனுக்கு உறுதுணையாக உள்ளது. இந்த வைட்டமின்கள் குறைபாடு நம் உடலில் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது. இலை பச்சை காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், பால், மீன், முட்டைகள், பருப்பு வகைகள், கொட்டைகள் உணவுகளில் நிறைந்துள்ளன.
இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கு முக்கியமானது. இந்த ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறை இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. ஃபோலேட் நரம்பு செயல்பாட்டிற்கும் இன்றியமையாதது. ஒவ்வொரு உடல் செல்லிலும் டிஎன்ஏ உருவாவதற்கு ஃபோலேட் அவசியம். ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளில் பருப்பு வகைகள், அடர் பச்சை இலைக் காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கல்லீரல் முக்கியமானது.