வயதான தோற்றத்தை துரிதப்படுத்தும் 10 வகை உணவுகள்!
முதுமை என்பது நம் உடலின் பொதுவான தேய்மானம் மற்றும் காலப்போக்கில் ஏற்படும் ஒரு மாற்றமாகும். இது இயற்கையானது மற்றும் தடுக்க இயலாதது என்றாலும், வயதாகும் தோற்றத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும். நாம் அனைவருமே முதுமையிலும் இளமையாக இருக்கவே விரும்புவோம். ஆனால், நம் அன்றாட வாழ்க்கை முறையால் இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தைப் பெறுகிறோம். அப்படி நம்மை விரைவில் முதுமையாக்கும் 10 வகை உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. மதுப்பழக்கம்: மது அருந்தும் பழக்கத்தால் முதுமையின் அறிகுறிகள் விரைவில் தோன்றத் தொடங்கும். அதிகப்படியான மது அருந்துதல் உடலை வறண்டு போகச் செய்து வறண்ட சருமத்தை உண்டாக்கும். அதிக அளவு மது அருந்தினால் நினைப்பதை விட வேகமாக வயதான தோற்றம் வரும். ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மதுவை அருந்தாமல் இருப்பது நல்லது.
2. ஆரோக்கியமற்ற உணவு: சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இனிப்புகள் அதிகம் எடுத்துக் கொள்வது உடல் பருமன், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். சர்க்கரை சருமத்தை நெகிழ வைக்கிறது. கொலாஜனை இழந்து சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.
3. அதிக உப்பு: உணவில் அதிக அளவு உப்பை சேர்த்துக் கொள்வதால் இரத்த அழுத்த பிரச்னை மற்றும் நம் சருமத்தில் அதிக பாதிப்பையும் உண்டுபண்ணும். குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகள் முதிர்ச்சி அடையும் அமைப்பை விரைவுப்படுத்தும். இதன் காரணமாக முதுமையின் அறிகுறிகள் விரைவில் தோன்றத் தொடங்கும்.
4. சோடியம் நிறைந்த உணவு வகைகள்: சோடியம் நிறைந்த ரெடிமேட் சூப் வகைகள், சாஸ்கள் உயர் இரத்த அழுத்தத்தை தூண்டுவதுடன் சிறுநீரக பாதிப்பு மற்றும் விரைவில் முதிர்ச்சியான தோற்றத்தையும் ஏற்படுத்தும்.
5. காபி, டீ பழக்கம்: காபியில் காஃபின் உள்ளது. இதனை அதிகப்படியான அளவில் எடுத்துக்கொள்ள முதுமையை வேகமாக வரவழைக்கும். காபி, டீயில் ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் உட்கொள்ளும்பொழுது நம்மை வேகமாக முதுமை அடைய வைக்கும். வறுத்த உணவுகள் மற்றும் அதிகம் காரமான உணவுகள் நம் சருமத்தை விரைவில் முதுமை அடைய வைக்கும்.
6. மன அழுத்தம் மற்றும் உடற்பயிற்சி இல்லாமை: மன அழுத்தம் விரைவில் வயதான தோற்றத்தை உண்டுபண்ணும். உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. நம் உடல் மிஷின் போன்றது. அதன் அனைத்து பாகங்களுக்கும் சரியான அளவு வேலை கொடுக்கவில்லை என்றால் நீரிழிவு மற்றும் இருதய நோய் அபாயங்கள் ஏற்படும். எனவே, தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.
7. புகைப்பிடித்தல்: மது அருந்துவது போல் புகைப்பிடிப்பதும் மோசமான விளைவுகளை உண்டாக்கும். இவை ஆரோக்கியத்தை கெடுப்பதுடன் முதுமையையும் வேகப்படுத்துகிறது.
8. பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகள்: பதப்படுத்தப்பட்ட இறைச்சியை எடுத்துக்கொள்வது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். கொலாஜன் உற்பத்தியை குறைப்பதுடன் சருமத்தின் வீக்கத்தையும் அதிகரிக்கும். எனவே, பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
9. தூக்கமின்மை: ஆறு மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம். தூக்கம் தேவையான அளவு இல்லையென்றால் உடல் மற்றும் மனசோர்வுடன் வயதான தோற்றத்தையும் அளிக்கும்.
10. சர்க்கரை: சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது வயதான தோற்றத்தை துரிதப்படுத்தும். சர்க்கரை சருமத்தில் உள்ள கொலாஜனை உடைக்கிறது. சுருக்கங்கள், முன்கூட்டியே வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் செலுத்துவதும், கலோரி கட்டுப்பாடும் நம்மை வயதான தோற்றத்தில் இருந்து தள்ளி நிற்க வைக்கிறது.
எனவே, வயதான தோற்றத்தை துரிதப்படுத்தும் உணவுகளை ஒதுக்கி, சத்துள்ள ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு சிறிதளவு உடற்பயிற்சியும் செய்ய என்றும் இளமையாக இருக்கலாம்.