உலக சுகாதார நிறுவன அமைப்பின் சத்துணவு ஆராய்ச்சியாளர்கள் உடல் சுறுசுறுப்புக்கு 10 சூப்பர் உணவுகளை சிபாரிசு செய்திருக்கின்றனர். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தண்ணீர்: நமது உடல் மூன்றில் 2 மடங்கு தண்ணீரால் ஆனது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடு, சிறுநீரக மற்றும் கல்லீரல் செயல்பாட்டிற்கும் உடலில் போதுமான அளவிற்கு நீர்ச்சத்து இருந்தால் மட்டுமே உங்களால் சுறுசுறுப்பாக இயங்க முடியும். வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலும், படுக்கைக்கு அருகிலும் ஒரு தண்ணீர் பாட்டில் எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள். விரதம் இருக்கும் நாட்களில் அவசியம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தானியங்கள்: அரிசி, கோதுமை, ராகி என எல்லா வகையான தானியங்களும் நோய்களை எதிர்த்துப் பாதுகாக்கும் ‘பி’ வைட்டமின்களும் ,இதயத் தசைகளை பாதுகாத்து உடல் உறுதியையும் இதய இயக்கத்தை சீராக வைத்துக்கொள்ளும். எல்லாவற்றையும் விட, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் தானியங்கள் உதவும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: ஐ.நா. சுகாதார அமைப்பு 3 ஆண்டுகளாக ஆய்வு செய்து உறுதிப்படுத்திய 13 சிறந்த காய்கறிகளில் முதல் இடத்தில் உள்ளது சர்க்கரை வள்ளிக்கிழங்குதான். இதில் வைட்டமின் ஏ, பி, சி, இ, பொட்டாசியம், இரும்பு, செம்பு, கால்சியம் உள்ளிட்ட 10க்கும் அதிகமான வேதிப்பண்புகள் இதில் உள்ளன. இதனை சமச்சீர் சத்து உணவு என்கிறார்கள்.
பீன்ஸ்: எல்லா வகையான பீன்ஸ்களும் உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்கக் கூடியவை. இவற்றில் அதிகமான நார்ச்சத்து உள்ளது. அதனால் உடல் எடை மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதனால் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. ஒரு நாளைக்கு 20 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்து உடலுக்கு தேவை. ஒரு கப் பீன்சில் 11 முதல் 17 கிராம் வரை நார்ச்சத்து உள்ளது.
தக்காளி: இப்பழங்களில் அதிகளவு ‘லைகோபின்’ எனும் சத்து இருப்பது தக்காளியில்தான். இது சுறுசுறுப்பான உடல் இயக்கத்திற்கு உதவுகிறது. அதேபோல பழங்களில் வைட்டமின் ‘ஏ சத்தும், செம்பு சத்தும் அதிகம் இருப்பது தக்காளியில்தான்.
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்: பால் முழு விகித உணவாகக் கருதப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத உணவாக பால் பரிந்துரைக்கப்படுகிறது. உடல் திரவங்கள், இரத்தம், தசைகள், எலும்பு மற்றும் நரம்பு திசுக்கள், இனப்பெருக்க திசுக்கள் ஆகியவற்றின் துடிப்பான செயல்பாட்டிற்கு பால் பெருமளவில் துணை புரிகிறது. அதேபோல தயிர், நெய் போன்ற பால் சார்ந்த பொருட்களும் சுறுசுறுப்பாக இயங்க உதவுகின்றன.
ஆரஞ்சு பழம்: இதில் உள்ள வைட்டமின் சியும், போலாசின் என்ற மற்றொரு பொருளும் செல்களின் வளர்ச்சிக்கும், சிவப்பணுக்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது சோம்பல் வராமல் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. அதோடு, எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.
மீன் மற்றும் கோழி இறைச்சி: உடலின் சுறுசுறுப்பான இயக்கத்திற்கு உதவும் புரதம் மற்றும் உடல் ஆற்றலைத் தரும் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து இருப்பது மீன் மற்றும் கோழி இறைச்சியில்தான். கோழி மற்றும் மீன் போன்றவை சிவப்பு இறைச்சியுடன் ஒப்பிடும்போது கொழுப்பு நிறைந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவையாகும். அவை ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளன.
முட்டைக்கோஸ்: இதில் உள்ள 10க்கும் மேற்பட்ட தாதுப்பொருட்கள் நம்மை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது என்கிறார்கள். முட்டைக்கோசை வேக வைத்து சாப்பிட்டால் அதிலிருந்து 7 முதல் 26 சதவீதம் அதிக அளவில் உடலுக்கு சுறுசுறுப்பு தரும் இரும்புச் சத்து கிடைக்கும் என்கிறார்கள்.
வாழைப்பழம்: ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது வாழைப்பழம் சாப்பிடுங்கள். இது புரோட்டீன்களை செயல்படுத்தும் கிரியா ஊக்கி என்கிறார்கள். மேலும், இரத்த சிவப்பணுக்களை இது பெருகச் செய்கிறது என்கிறார்கள்.