.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
கார்ட்டிசால் (Cortisol) என்பது நம் உடலில் சுரக்கும் முக்கியமான ஹார்மோன்களில் ஒன்றாகும். நம் உடலின் ஒவ்வொரு உள்ளுறுப்புகள் மற்றும் திசுக்களின் செயல்பாட்டிலும் கார்ட்டிசாலின் தலையீடு இருக்கும். நம் உடல் எடுத்துக்கொள்ள வேண்டிய கொழுப்பு, புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றின் அளவைக் கட்டுப்படுத்துவது, இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைப்பது போன்ற பல வகையான செயல்களும் சரிவர நடைபெற உதவுவது கார்ட்டிசால். நமக்கு மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படும்போது ஸ்ட்ரெஸ் உண்டாகும். ஸ்ட்ரெஸ் உண்டாகும்போது இந்த ஹார்மோன் கூடுதலாக உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கும்.
கார்ட்டிசால் கூடுதலாக சுரக்கும்போது உடலில் பலவித கோளாறுகள் உண்டாக வாய்ப்பாகும். அதிகளவில் சுரக்கும் கார்ட்டிசாலை இயற்கை முறையில் குறைப்பதற்கு நாம் உட்கொள்ள வேண்டிய 10 வகை சூப்பர் உணவுகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. சால்மன் மற்றும் சர்டைன் மீன்: இம்மீன்களை உண்பதால் இவற்றில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கார்ட்டிசால் அளவை குறைக்க உதவும்.
2. டார்க் சாக்லேட்: குறைந்த அளவில் தினசரி டார்க் சாக்லேட் உண்பது மகிழ்ச்சியான மனநிலை உண்டாகவும் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளரவும் உதவும். மேலும், இது அதிகளவு உற்பத்தியாகியுள்ள கார்ட்டிசாலை குறைக்கவும் அதனால் உண்டான வீக்கங்களைக் கரைக்கவும் செய்யும்.
3. மஞ்சள்: இதில் உள்ள குர்க்குமின் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் கார்ட்டிசால் அளவை குறைக்க உதவும்.
4. ஃபிளாக் சீட்ஸ் மற்றும் வால்நட்: இவற்றில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜென்ஸ், கார்ட்டிசால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மன நிலையில் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்கும்; பெருந்தமனித் தடிப்பு (Atherosclerosis) உண்டாகும் அபாயத்தைத் தடுக்கும்.
5. க்ரீன் டீ: இதிலுள்ள குறிப்பிட்ட பாலிபினால், எபிகல்லோகேட்டச்சின் கல்லாட்டே (EGCG), ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி இன்ஃபிளமேட்டரி. இது உடலையும் மனதையும் அமைதிப்படுத்தி கார்ட்டிசால் அளவை குறைக்க உதவும்.
6. வாழைப் பழங்கள்: இவற்றில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி அமைதியான தூக்கம் பெற உதவும். மேலும், இதிலுள்ள ட்ரெய்ப்டோஃபேன் என்ற பொருள் உடலுக்குள் சென்று செரோட்டினினாக மாறி அமைதியான மூட் வரவழைக்க உதவும்.
7. புரோபயோட்டிக் உணவுகள்: நம் மனநிலை சரி இல்லாதபோது இந்த உணவுகளில் உள்ள உயிரோட்டமுடைய புரோபயோட்டிக் பாக்டீரியாக்கள் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கவும் கார்ட்டிசால் அளவை சமநிலைப்படுத்தவும் உதவும். புரோபயோட்டிக் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ள கிம்ச்சி, கெஃபிர், சார்க்ராட் (Sauerkraut), க்ரீக் யோகர்ட், இஞ்சி ஊறுகாய் மற்றும் நொதிக்கச் செய்த பால் பொருட்கள் சாப்பிடுவதும் கார்ட்டிசால் அளவை குறைக்க உதவும்.
8. பூண்டு: இயற்கையிலேயே பூண்டு ஒரு ஆன்டி பயோட்டிக் மற்றும் ஆன்டி வைரல் குணமுடைய பொருள். இது நியூரோ புரொடெக்டிவ் விளைவுகளை உண்டுபண்ணி, கார்ட்டிசால் உள்ளிட்ட ஸ்ட்ரெஸ் சம்பந்தப்பட்ட ஹார்மோன்களின் அளவு குறைய உதவும்.
9. பூசணி விதைகள்: இவற்றிலுள்ள மக்னீசியம் சத்து இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவும். அதன் மூலம் ஹார்மோன் அளவும் சமநிலைப்படும்.
10. வெங்காயம்: ஸ்ட்ரெஸ் நிறைந்த சூழ்நிலையில், வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் என்ற கூட்டுப்பொருள் கார்ட்டிசால் அளவை வெகு விரைவில் குறையச் செய்து ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தும்.
கார்ட்டிசால் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க நாமும் மேற்கண்ட உணவுகளை அடிக்கடி உண்போம். உடல் ஆரோக்கியம் காப்போம்.