கோடைக்காலத்தில் சுகமாக வாழ 10 வழிமுறைகள்...
கோடைகாலம் தொடங்கிவிட்டது. மூன்று மாதங்கள் வெப்பம் நம்மை வாட்டி வதைக்கும். குளிர்ச்சியான பொருட்களையே நமது மனம் விரும்பும். குறிப்பாக ஐஸ் வாட்டர், குளிர் பானங்கள் இவற்றை நமது மனம் பெரிதும் விரும்பும்.
கோடை காலங்களில் அதீத வெப்பத்தின் காரணமாக வயிற்றுவலி, அம்மை முதலான நோய்கள் நம்மைத் தாக்கக்கூடும். கோடையையும் வெப்பத்தையும் நம்மால் நிச்சயம் தவிர்க்க முடியாது. ஆனால் கூடுமான மட்டும் அதன் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். அதைப்பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
1. கூடுமான வரை பகல் நேரப் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதிகாலை அல்லது மாலையில் பயணியுங்கள். உடன் எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீரைக் கொண்டு செல்லுங்கள்.
2. குளிர்ச்சியான நீரை அருந்தினால் தாகம் தணியும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. வெயில் தகிக்கும் போது குளிர்ச்சியான நீரையோ அல்லது குளிர்ச்சியான பானங்களையோ அருந்தினால் தாகம் தணிந்தது போல இருக்கும். ஆனால் சில நிமிடங்களிலேயே தாகம் அதிகமாக எடுக்கத் தொடங்கும். அதனால் கூடுமான வரை சாதாரண நீரையே அருந்தப் பழகுங்கள்.
3. வெளியில் செல்லும் போது குடையைப் பிடித்துக் கொண்டோ அல்லது தொப்பியை அணிந்து கொண்டோ செல்லுங்கள். இவை வெப்பத்திலிருந்து நம்மைக் காக்கும் கவசங்களாகும்.
4. அவ்வப்போது மோர், இளநீர் முதலானவற்றை அருந்துங்கள். இவை உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
5. கோடைகாலங்களில் மட்டுமே கிடைக்கும் நுங்கு முதலான இயற்கை உணவுகளை சாப்பிடலாம். காபி டீ முதலான சூடான பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
6. எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி சாறு அருந்துவது சிறப்பு.
7. குறைந்தபட்சம் தினமும் மூன்றுலிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.
8. காலை மாலை என இரு வேளைகளும் பச்சைத் தண்ணீரில் குளிப்பது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியைத் தரும்.
9. மண்பானையில் வெட்டிவேரைப் போட்டு குடித்தால் வெயிலுக்கு இதமாக இருக்கும். உடல்நலத்திற்கும் நன்மை பயக்கும்.
10. கூடுமானவரை டெரிகாட்டன் மற்றும் நைலான் உடைகளைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை அணியுங்கள்.