'சைலன்ட் கில்லர்' என்றும் உயர் இரத்த அழுத்தம் எனவும் கூறப்படும் நம் உடல் நிலையில் ஏற்படும் கோளாறை உரிய முறையில் கவனித்துக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் நாளடைவில் அதன் விளைவாக மாரடைப்பு, ஸ்ட்ரோக், சிறுநீரகக் கோளாறு போன்ற ஆபத்தான நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் வருவது நிச்சயம். மருத்துவ உதவி, உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் இரத்த அழுத்தத்தை சமநிலைக்குக் கொண்டு வர முடியும். சில வகை மூலிகைகளும் இதற்கு உதவி புரியக் கூடும். அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
* பூண்டில் உள்ள அல்லிசின் (Allicin) என்ற கூட்டுப் பொருள் இரத்த நாளங்களைத் தளர்வுறச் செய்து இரத்த அழுத்தத்தின் அளவை குறையச் செய்யும் வல்லமை கொண்டது.
* கால்சியம் இரத்தக் குழாய்களையும் இதயத்தின் தசைகளையும் சுருங்கச் செய்யும் குணம் கொண்டது.செலரி என்ற தாவரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எஸ்ஸன்ஸ்ஸானது ஓர் இயற்கை முறை கால்சியம் சேனல் தடுப்பானாக செயல்புரிந்து, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. செலரியிலுள்ள நார்ச்சத்தும் இதய ஆரோக்கியம் காக்க உதவுகிறது.
* துளசி இலைச் சாற்றில் உள்ள யூகெனால் (Eugenol) என்ற பொருள் கால்சியம் சேனல் தடுப்பானாக செயல்புரியக் கூடியது. துளசி இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த முடியும்.
* ஓம விதைகளில் உள்ள ரோஸ்மேரினிக் என்ற அமிலம் மற்றும் அதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்களும் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவும்.
* பட்டை (Cinnamon) என்ற மூலிகையில் உள்ள வாஸோ டைலேடரி (Vasodilatory) தன்மையானது இரத்தக் குழாய்களின் சுவர்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் சமநிலைப்படுகிறது.
* க்ரீன் ஓட்ஸில் டயட்டரி நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்த மேலாண்மைக்கு உதவுவதுடன் ஆன்டி ஹைப்பர்டென்சிவ் மருந்துகளின் உபயோகத்தையும் குறைக்கச் செய்யும்.
* ஃபிளாக்ஸ் விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை இதய இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உயர் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும் உதவும். இவ்விதைகளை தொடர்ந்து உட்கொள்ளும்போது இரத்தக் குழாய்களின் உட்புற சுவரில் பிளேக்குகளால் உண்டாகும் பெருந்தமனி தடிப்பை (Atherosclerosis) தடுக்கலாம்.
* இஞ்சியிலுள்ள வாஸோரிலாக்ஸன்ட் குணமானது இஞ்சியை ஓர் இதய ஆரோக்கியம் காக்கும் உணவாக கருதச் செய்துள்ளது. இஞ்சி ஒரு கால்சியம் சேனல் பிளாக்கர் (Calcium Channel Blocker). இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டம் தடையின்றிப் பாயவும் உதவி புரிகிறது.
* ஏலக்காயில் (Cardamom) உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதை ஒரு கால்சியம் சேனல் பிளாக்கராக செயல்படத் தூண்டி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி புரிகின்றன. மேலும் இதிலுள்ள டையூரிக் குணங்கள் உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவுகின்றன.
* ஊட்டச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள மூலிகை பார்ஸ்லி (Parsley). இதிலுள்ள கரோடெனாய்ட் மற்றும் வைட்டமின் C போன்றவை இதய இரத்த நாளங்களின் மொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கவும் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கவும் உதவுகின்றன.
* பிரம்மி (Brahmi) என்ற மூலிகைத் தாவரம் ஹைப்பர் டென்ஷனை குறைக்கச் செய்யும் பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளின் தயாரிப்பில் உபயோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பிரம்மி அறிவாற்றலை மேம்படுத்தவும் உதவக்கூடிய மூலிகை.
நம் முன்னோர்கள் பயன்படுத்திய இந்த மூலிகைகளை நாமும் தகுந்த முறையில் உபயோகித்து நற்பலன் பெறுவோம்.