
நமது உடல் ஆரோக்கியத்தில் பாதங்களின் பங்கு மிக முக்கியமானது. நாள் முழுவதும் நம் உடலின் எடையைத் தாங்கிச் சுழலும் பாதங்கள், நாம் அதிகம் கவனிக்காத ஓர் உறுப்பாகவே இருக்கின்றன. அழுக்கு, பாக்டீரியா, பூஞ்சை, வியர்வை எனப் பலவற்றையும் எதிர்கொள்ளும் பாதங்களைப் பராமரிப்பது, வெறும் சுகாதாரத்திற்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் அவசியம்.
பாதங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது பாத நோய் தொற்றுகள், துர்நாற்றம் மற்றும் பிற பிரச்சனைகளைத் தடுக்கும். தினமும் உங்கள் கால்களைப் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க 13 எளிய மற்றும் பயனுள்ள வழிகளைப் பார்ப்போம்.
1. வெதுவெதுப்பான நீரில் ஒரு மென்மையான, PH சமநிலையான சோப்பைப் பயன்படுத்தி, விரல் இடுக்குகள் உட்பட பாதத்தின் அனைத்துப் பகுதிகளையும் நன்கு கழுவவும்.
2. வெளியே சென்று வந்ததும் அல்லது தூங்கச் செல்வதற்கு முன் தினமும் கால்களைக் கழுவுவது அவசியம். இது நாள் முழுவதும் சேர்ந்த அழுக்கு மற்றும் வியர்வையை நீக்க உதவும்.
3. காலில் உள்ள நகங்களின் அடியிலும், இடுக்குகளிலும் அழுக்குகள் சேர வாய்ப்புள்ளது. சிறிய பிரஷ் பயன்படுத்தி நகங்களைச் சுத்தம் செய்யவும்.
4. பூஞ்சைத் தொற்றுகள் விரல் இடுக்குகளில்தான் அதிகம் தோன்றும். எனவே, இந்த இடங்களைச் சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவவும்.
5. கழுவிய பிறகு, பாதங்களை, குறிப்பாக விரல் இடுக்குகளை, நன்கு உலர்த்த வேண்டியது மிக அவசியம். ஈரப்பதம் பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஒரு சுத்தமான துணியைப் பயன்படுத்தவும்.
6. வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வெதுவெதுப்பான நீரில் சிறிது எப்சம் சால்ட் (Epsom Salt) அல்லது டீ ட்ரீ ஆயில் சேர்த்துப் பாதங்களை ஊறவைக்கலாம். இது தசைகளைத் திலர்த்தவும், துர்நாற்றத்தைப் போக்கவும், பாக்டீரியாக்களைக் கொல்லவும் உதவும்.
7. கால் பாதம் மற்றும் குதிகாலில் உள்ள இறந்த செல்களை நீக்க, வாரத்திற்கு ஒருமுறை ஒரு மைல்ட் ஸ்க்ரப் பயன்படுத்தலாம். இது சருமத்தை மென்மையாக்கும்.
8. கழுவி, உலர்த்திய பிறகு, பாதங்களுக்கு ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் தடவவும். இது சருமம் வறண்டு போவதைத் தடுத்து, வெடிப்புகளைக் குறைக்கும். விரல் இடுக்குகளில் மாய்ஸ்சரைசர் போட வேண்டாம்.
9. கால்களில் பூஞ்சை அல்லது துர்நாற்றம் இருந்தால், வெதுவெதுப்பான நீரில் சிறிது ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்துப் பாதங்களை ஊறவைக்கலாம். இதன் அமிலத்தன்மை பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும்.
10. சாக்ஸ் அணிவதற்கு முன் அல்லது காலணிகள் அணிவதற்கு முன், கால்களில் சிறிது டால்கம் பவுடர் தூவுவது வியர்வையைக் கட்டுப்படுத்தி, துர்நாற்றத்தைத் தடுக்கும்.
11. பழைய, அழுக்கான செருப்புகள் அல்லது காலணிகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அவ்வப்போது செருப்புகளை சுத்தம் செய்யவும் அல்லது மாற்றவும்.
12. பூஞ்சைத் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால், பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் கொண்ட சோப்பைப் பயன்படுத்தலாம்.
13. மீண்டும் மீண்டும் பாதப் பிரச்சனைகள் ஏற்பட்டால், ஒரு பாத நோயியல் நிபுணரை (Podiatrist) அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
உங்கள் பாதங்களுக்குச் சரியான கவனிப்பைக் கொடுப்பது, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் ஒரு எளிய பழக்கமாகும். தினமும் இந்தப் பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், ஆரோக்கியமான, புத்துணர்ச்சியான பாதங்களுடன் நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்படலாம்.