மனநல மருத்துவமனைக்கு செல்லும் இளைஞர்களுடைய எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.
கொரோனாவுக்கு பிறகான காலத்தில் இந்தியாவில் அதிக அளவிலான மன அழுத்த பிரச்சனைகளை 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பெருமளவில் சந்திக்கின்றனர் என்று க்ரியா பல்கலைக்க ழகத்தின் செப்பியன் லேப்ஸ் சென்டர் நடத்தி ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவின் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 427 நபர்களிடம் நடத்திய ஆய்வு முடிவு, தற்போதைய இளைஞர்களிடம் நம்பிக்கை அற்ற எண்ணம் அதிகரித்து இருக்கிறது. பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்து இருக்கிறது. அனைத்திற்கும் அஞ்சக்கூடிய மனநிலை அதிகரித்து இருக்கிறது. உணவு பழக்கம், போதை பொருள் பயன்பாடு, வாசிப்புத்திறன் குறைவு ஆகியவையும் இவ்வாறான பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றது. மேலும் தாழ்வு மனப்பான்மை, பயம், வேலையற்ற சூழல் ஆகியவை தற்கொலைக்கு இளைஞர்களை அழைத்து செல்கிறது.
மேலும் சமூக உரையாடல்கள் இன்றைய இளைஞர்களிடம் பெருமளவில் குறைந்து இருப்பதாகவும் மாறாக இணைய மற்றும் சமூக ஊடகங்களுடைய பயன்பாடு அதிகரித்து இருப்பதும் அதிக அளவிலான மன அழுத்தத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மன அழுத்தத்திற்காக மருத்துவம் பெறும் இளைஞர்களுடைய எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு 50 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இந்த மோசமான நிலைக்கு ஒட்டுமொத்த சமூக சூழலும் முக்கிய காரணமாக இருக்கிறது. இவை இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை அற்ற மனோபாவத்தை அதிகரிக்க செய்திருக்கிறது. இப்படி பல்வேறு உளவியல் மற்றும் சமூக காரணிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் இந்தியாவின் வட மாநிலங்களை விட தமிழ்நாடு மற்றும் கேரளா, மகாராஷ்டிரா போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது அதிகமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.