
ஆக்ரா (Okra) எனப்படும் வெண்டைக்காயை நாம் குழம்பு மற்றும் சாம்பார் வகைகளில் சேர்த்தும் பொரியல் செய்தும் சாப்பிட்டு வருகிறோம். வெண்டைக்காயை இப்படி சாப்பிடுவதை விட அதை நறுக்கி இரவில் தண்ணீரில் போட்டு ஊறவைத்து காலையில் அந்த நீரைக் குடிக்கும்போது நமக்கு ஊட்டச் சத்துக்கள் அதிகளவில் கிடைக்கின்றன. அதிலுள்ள நார்ச் சத்துக்கள் செரிமானம் சிறப்பாக நடைபெறவும் மலச்சிக்கல் நீங்கவும் உதவுகின்றன. கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் சர்க்கரை உடலுக்குள் உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைத்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயரும் அபாயத்தைத் தடுக்கிறது. ஆக்ரா வாட்டரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொழுப்பின் அளவை குறையச் செய்து இதய இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இதனால் இதய நோய் வரும் அபாயம் தடுக்கப்படுகிறது. இதிலுள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
இத்தனை நன்மைகள் தரக்கூடிய வெண்டை நீரை எவரும் விரும்பி அருந்துவதில்லை. காரணம் அதன் கொழ கொழப்புத்தன்மையே ஆகும். கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்த வெண்டைக் காயை தண்ணீரில் போடும்போது தண்ணீர் சளி போன்ற டெக்சருக்கு மாறிவிடுகிறது. இதனாலேயே பலர் அதன் பக்கம் செல்வதில்லை. இப்பதிவில் கூறப்படும் மூன்று எளிய வழி முறைகளைப் பின்பற்றினால் வெண்டை நீரை நாவுக்கினிய ஒரு பானமாக மாற்றிவிட முடியும்.
1.லெமன் சுவை: வெண்டை நீரில் (Okra Water) லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து அருந்தும் போது அதன் சுவை வேற லெவலுக்கு மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடும்.
2. குளிரூட்டி அருந்துதல்: இரவில் ஊற வைத்த வெண்டை நீரை காலையில் ஃபிரிட்ஜில் வைத்து குளிரச் செய்து எடுக்கையில் அதன் சுவை புத்துணர்ச்சியும் கிளர்ச்சியும் அளித்து அதை ஓர் அட்டகாசமான பானமாக மாற்றிவிடும். கூட கொஞ்சம் ஐஸ் க்யூப் போட்டு குடிக்கலாம்.
3. பழங்கள் சேர்த்து ஸ்மூத்தியாக்கி அருந்துதல்:
வெண்டை நீரில் ஸ்டரா பெரி, ஆப்பிள், பனானா போன்ற பழங்களை சேர்த்து ஸ்மூத்தியாக்கிக் குடிக்கலாம்.
அப்போது வெண்டைக் காயின் கொழ கொழப்புத் தன்மை நீங்கி அதன் சுவையும் அதிலுள்ள ஊட்டச்சத்துக்களின் அளவும் அதிகரிக்கும்.
மேலே கூறிய இந்த மூன்று வழிகளைப் பின்பற்றி வெண்டை நீரை விரும்பி அருந்துங்கள். பயனடையுங்கள்.