கொழுப்புச் சத்து அதிகமாவதால்தான் மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றை சீர்செய்ய, உண்ணும் உணவில் இருந்தே சரிசமமாக உணவை எடுத்துக் கொண்டு வந்தால் கொலஸ்ட்ரால் கூடாமல் பார்த்துக் கொள்ளலாம். இதனால் நெஞ்சு வலி, நெஞ்சுகரிப்பு, மாரடைப்பு போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும். அதற்கான எளிய குறிப்புகள் இதோ:
இரவில் நேரம் கடந்து சாப்பிடுவதால் படுத்திருக்கும் பொழுது வயிற்றில் அமிலம் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும். இதனால் நெஞ்சு எரிச்சல் உண்டாகும். தூக்கமும் கெட்டுவிடும். அதனால் படுக்க செல்வதற்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் முன்பு சாப்பிட பழகிக் கொண்டால் உடம்பு, தொல்லை இல்லாமல் ஓய்வு பெறும்.
இனிய இசை கேட்டால் மனம் அமைதி அடைந்து உடலில் ஆரோக்கியம் மேம்படும். ரத்த நாளங்கள் விரிவடைந்து மூளை நரம்புகளில் நைட்ரிக் ஆக்சைடு வெளிப்படுகிறது. இதனால் ரத்தம் உறைவதும் தடுக்கப்படுகிறது.
இரத்தம் உடலில் சுத்தமாவதற்கு தினமும் சிறிது தேனுடன் குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டுவர வேண்டும். இதனால் ரத்தம் சுத்தமாவதுடன் மேனியும் நல்ல அழகு பெறும்.
கத்தரிக்காயை சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பவர்கள் அநேகம் உண்டு. அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் கத்தரிக்காய் கொழுப்புச் சத்தை குறைக்கும். ஆகவே கத்தரிக்காய் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகமாக இருப்பதை குறைத்து இருதயத்தைப் பலப்படுத்தும். நல்ல உணவாகவும் பயன்தரும்.
மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் கொலஸ்ட்ராலை குறைப்பதை கண்டறிந்துள்ளனர். அவர்கள் கூறுவது என்னவென்றால் ஆப்பிள் தினம் சாப்பிட வியாதி வருவதை தடுக்கும். நரம்புத் தளர்ச்சியை நீக்கி, உடம்பில் கொழுப்பு சேராமல் தடுக்கும் என்பதுதான்.
கொண்டைக்கடலை உடம்பில் கொழுப்பு இருப்பதை குறைக்கிறது. இதனால் கொழுப்பு ரத்தத்தில் சேராமல் இருக்கும். ஆதலால் இந்தக் கடலையை வாரம் இரண்டு முறை சாப்பிடுவது நல்லது.
கொள்ளு துவையல் சாப்பிட உடம்பில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளலாம். எந்த வழியிலாவது கொள்ளை பயன்படுத்தி சாப்பிடுவது நல்லது.
கொலஸ்ட்ரால் உடம்பு உடையவர்கள் ஓட்ஸ் கஞ்சி சாப்பிட கொழுப்பு ஏறாமல் தடுக்கும். இதில் புரத சத்தும் உள்ளது.
கொலஸ்ட்ரால் குறைவதற்கு பூண்டு பல்லை தோல் நீக்கி வேக வைத்து மிக்ஸியில் அரைத்து பாலில் கலந்து குடித்து வரலாம். போனசாக வாயு வலியும் மூட்டு வலியும் இருந்தாலும் இதனால் குணமடையும்.
உடம்பில் கொலஸ்ட்ரால் குறைய சின்ன வெங்காயம், பூண்டு இவற்றை வதக்கி காலை வேளையில் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். கொழுப்பும் படிப்படியாக குறையும்.
மாதுளைச் சாறு குடித்தால் ரத்த அழுத்தத்தையும் கொழுப்பையும் கட்டுப்பாட்டில் வைக்கும்.
சீரகத்தையும் கறிவேப்பிலையும் அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து தினசரி மோரில் கலந்து குடித்து வர, கொழுப்பு சத்து உடம்பில் சேராமலும், அஜீரணம் ஏற்படாமலும் இருக்க வழிவகை செய்யும்.
தினமும் நெஞ்சு எரிச்சல் வந்தாலும் அல்லது சில நாள் மட்டும் நெஞ்சுவலி வருவது அல்லது தினமும் வருவதாக இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் நல்லது. நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நோயுடையவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை செக்கப் செய்து கொள்வது மாரடைப்பு வராமல் தடுக்க உதவி செய்யும்.