

சிலர் பற்கள் மஞ்சளாக இருக்கும் காரணத்தால் வாய்விட்டு சிரிக்கக்கூட கூச்சப்படுவார்கள். புகைப்படம் எடுக்கும் போது கூட பல்லை காட்ட மாட்டார்கள். நாம் நன்றாக தானே பல் தேய்க்கிறோம்... இருப்பினும் பற்கள் மஞ்சளாக இருப்பதற்கான காரணம் என்ன என்பதை எப்போதாவது யோசித்ததுண்டா? பற்களில் உள்ள மஞ்சளை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சரிசெய்ய முடியும். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
நம்முடைய பற்களின் வெளிப்புற லேயரின் பெயர் தான் எனாமல் (Enamel). இது நம் எலும்புகளை விட உறுதியானது. ஆனால் ஒருமுறை எனாமலில் சேதம் ஏற்பட்டால் அதை தானே சரி செய்துக்கொள்ளும் சக்தி இதற்கு கிடையாது. நாம் குடிக்கும் காபி, டீ, கூல்டிரிங்க்ஸ் பற்களில் சேதத்தை ஏற்படுத்தி எனாமல் தேய்வடைய வழிவகுக்கிறது. நிறைய பேர் பல் துலக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். அதுமட்டுமில்லாமல் பற்களுக்கு அழுத்தம் கொடுத்து தேய்த்துக் கொண்டிருப்பார்கள்.
ரசாயனம் கலந்த டூத்பேஸ்ட்டை பயன்படுத்தும் போது பற்களின் நிலைமை இன்னும் மோசமாகிறது. நம்முடைய பற்களை பாதுகாப்பதற்காகவே இயற்கையாகவே நம் வாயில் உருவாகும் ஸ்பெஷலான நீர்தான் உமிழ்நீர். இந்த உமிழ்நீர் உங்கள் பற்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
ஆனால், நம் உடலில் நீர்சத்து குறைவதாலும், மனஅழுத்தம் அதிகரிப்பதாலும், சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ளாததாலும் உமிழ்நீர் சுரப்பு குறைகிறது. இதுதான் பற்கள் மஞ்சளாவதற்கான காரணங்கள்.
பற்களை (Teeth care) வீட்டில் இருந்தே வெண்மையாக்கும் 3 வழிமுறைகள்:
1. முதலில் ஒரு சிறிய பவுலை எடுத்துக் கொண்டு 1 தேக்கரண்டி மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் 1/2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் விரலில் இந்த பேஸ்டை தொட்டு பற்களை துலக்க ஆரம்பியுங்கள். இதை 2 அல்லது 3 நிமிடமாவது செய்ய வேண்டும். பிறகு வாய் கொப்பளித்துவிட வேண்டும். இப்போது உங்களால் நன்றாக பற்கள் மீது இருந்த மஞ்சள் கறை நீங்கியதை உணர முடியும். இதை வாரத்தில் மூன்று முறை செய்தால் போதுமானது.
2. முதலில் படிகாரம் சிறிது எடுத்து அதை அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நன்றாக கரைத்துக் கொள்ளவும். பிறகு இது ஆறியதும் அதை எடுத்து மிக்ஸியில் சேர்த்துவிட்டு கல் உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து கொள்ளவும். இதை சேமித்து வைத்துக் கொள்ளவும். இரவு தூங்குவதற்கு முன்பு இந்த பவுடரில் ஒரு சிட்டிகை எடுத்து பற்களில் தேய்க்க ஆரம்பியுங்கள். இது பற்களுக்கு உடனடி வெண்மையை தரும். இதை வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. நீங்கள் தினமும் சப்பிடும் உணவுடன் 1 நாவல் பழம், 1 நெல்லிக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காயில் வைட்டமின் சி இருப்பதால் ஈறுகளை இது சரி செய்கிறது. நாவல்பழத்தை தொடர்த்து சாப்பிட்டு வரும்போது நம் வாயை அது சுத்தம் செய்கிறது. ஆரோக்கியமான உமிழ்நீர் சுரக்க உதவுகிறது.
இனி, இந்த முறைகளை பயன்படுத்தி உங்கள் பற்களை பளபளப்பாக்குங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)