
நமது உடலில் இருக்கும் கல்லீரல் செரிமானம், நச்சு நீக்கம், ஆற்றல் சேமிப்பு எனப் பல முக்கியப் பணிகளைச் செய்கிறது. ஆனால், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், மோசமான வாழ்க்கை முறை காரணமாக, கல்லீரலில் கொழுப்பு படியலாம். இது கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) நோய் என்று அழைக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், இது கல்லீரல் வீக்கம், ஃபைப்ரோசிஸ் போன்ற தீவிர கல்லீரல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். கொழுப்பு கல்லீரலைக் கட்டுப்படுத்தவும், அதை மாற்றியமைக்கவும் உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வருவது அவசியம். இந்தப் பதிவில் கொழுப்பு கல்லீரலை எதிர்த்துப் போராட உதவும் 4 ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளைப் பற்றிப் பார்ப்போம்.
1. முழு தானிய ரொட்டி: பதப்படுத்தப்பட்ட மாவுகளுக்குப் பதிலாக, முழு தானிய ரொட்டியை தேர்ந்தெடுங்கள். ஒரு துண்டு முழு தானிய ரொட்டியில், அரை அவகேடோவைப் பிசைந்து தடவவும். அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை கல்லீரல் கொழுப்பைக் குறைக்க உதவும். முழு தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை. இது செரிமானத்திற்கும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். வாரத்திற்கு 2-3 முறை இந்த ஸ்நாக்ஸை எடுத்துக் கொள்ளலாம்.
2. பாதாம் மற்றும் வால்நட் பருப்புகள்: பாதாம், வால்நட் பருப்புகள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வால்நட் பருப்புகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இது கல்லீரல் கொழுப்பைக் குறைத்து, வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும். பாதாமில் வைட்டமின் E நிறைந்துள்ளது, இது கல்லீரல் செல்களைப் பாதுகாக்கும். தினமும் ஒரு கைப்பிடி பருப்புகளை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் அதிக கலோரிகள் இருப்பதால், அளவோடு சாப்பிடுவது முக்கியம்.
3. பெர்ரி பழங்கள் மற்றும் தயிர்: ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை கல்லீரல் செல்களைப் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். குறைந்த கொழுப்புள்ள தயிருடன் ஒரு கப் பெர்ரி பழங்களைச் சேர்த்துச் சாப்பிடலாம். தயிரில் உள்ள ப்ரோபயாடிக்குகள் செரிமானத்தை மேம்படுத்தி, குடல் ஆரோக்கியத்திற்கு உதவும். வாரத்திற்கு 3-4 முறை இந்த ஸ்நாக்ஸை சாப்பிடலாம்.
4. வேகவைத்த கொண்டைக்கடலை சாலட்: கொண்டைக்கடலை புரதம், நார்ச்சத்து நிறைந்த ஒரு சிறந்த ஸ்நாக்ஸ். வேகவைத்த கொண்டைக்கடலையுடன் சிறிதளவு நறுக்கிய வெள்ளரி, தக்காளி, வெங்காயம் சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து, சிறிது உப்பு மிளகு தூவி சாலட்டாகச் சாப்பிடலாம். இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருவதோடு, கல்லீரலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களையும் அளிக்கும். வாரத்திற்கு 1-2 முறை இந்த ஸ்நாக்ஸை சேர்த்துக் கொள்ளலாம்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையைச் சரிசெய்ய உணவுமுறை மாற்றம் மிகவும் அவசியம். இந்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)