நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களுக்கு சிறப்பான பானங்களைக் கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். அந்த வகையில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பானங்கள் மற்றும் குழந்தைகள் அவசியம் குடிக்க வேண்டிய பானங்கள் குறித்தும் இந்தப் பதிவில் காண்போம்.
1. சோடா: சுவையான சோடாவில் சர்க்கரை அதிகம் உள்ளதால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சோடாவில் உள்ள சர்க்கரை மற்றும் அமிலம் குழந்தையின் பற்களை சேதப்படுத்துவதோடு, உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய்கள் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
2. எனர்ஜி டிரிங்க்ஸ்: சந்தையில் கிடைக்கும் எனர்ஜி ட்ரிங்க்ஸ்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஆற்றல் பானங்களை குடிக்கக் கூடாது என்று அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் பரிந்துரைக்கிறது.
3. விளையாட்டு பானங்கள்: குழந்தைகள் வெளியில் ஸ்போர்ட்ஸ் டிரிங்க்ஸ் குடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவற்றில் உள்ள சர்க்கரை, சோடியம், காஃபின் மற்றும் செயற்கை வண்ணங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்து, எடை அதிகரிப்பு, பல் சொத்தை மற்றும் இருதய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
4. சுவையான பால்: இந்த வகை பாலில் சுவைக்காக அதிக அளவு சர்க்கரை இருப்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியக் குறைபாட்டை உண்டாக்கி உடல் பருமனை ஏற்படுத்துகின்றன.
குழந்தைகள் குடிக்க வேண்டிய பானங்கள்:
1. தண்ணீர்: குழந்தைகள் அவசியம் குடிக்க வேண்டிய முதல் தேர்வு தண்ணீர். இது அவர்களது உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மேலும், மூட்டுகளை வலுவூட்டி சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. குழந்தை எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும்.
2. பால்: கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை அடங்கிய பால், குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உங்கள் பிள்ளைக்கு லாக்டோஸுக்கு ஒவ்வாமை இருந்தால், மாற்றாக பாதாம் பால் அல்லது ஓட்ஸ் பாலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
3. ஃப்ரெஷ் ஜூஸ்: சர்க்கரை இல்லாமல் பழச்சாறு கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. பழச்சாறுகளில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் உதவும்.
4. மூலிகை: தேநீர் கெமோமில் பூக்கள் மற்றும் புதினா போன்ற மூலிகை தேநீர் குழந்தைகள் எந்த இனிப்பும் இல்லாமல் சூடாக குடித்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.
குழந்தைகளுக்குக் குடிக்க கொடுக்க வேண்டிய பானங்களை தவறாமல் கொடுத்து மற்றவற்றை தவிர்த்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.