உடல் பருமனால் தவிக்கும் 4.3 மில்லியன் குழந்தைகள்!

உடல் பருமனால் தவிக்கும் 4.3 மில்லியன் குழந்தைகள்!

ந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 4.3 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நான்கில் ஒருவர் உடல் பருமன் அல்லது நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ‘பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிடுவதுதான் உடல் பருமனுக்குக் காரணம்’ என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. துரித உணவு என்ற பெயரில் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிடுவதில் கட்டுப்பாடு இல்லாமல் போனதுதான் இந்த விளைவுக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

ஊட்டச்சத்துக்களை ஆதரிக்கும் பொதுநலனுக்கான அமைப்பு இந்தியாவில் விற்கப்படும் 43 வகையான பேக் செய்யப்பட்ட உணவு வகைகளை ஆய்வு செய்தது. இந்தத் தயாரிப்புகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு போன்றவை சேர்ந்திருப்பதுதான் உடல் பருமனுக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உணவுப் பொருள்கள் எல்லாம் பதப்படுத்தப்பட்ட, பேக் செய்யப்பட்ட உணவுகளின் கீழ் வருகின்றன.

இவற்றில் உடனடியாக சாப்பிடக்கூடிய உணவு வகைகளான கேக், பால் பொருட்கள், சிப்ஸ், பிஸ்கட்டுகள், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், குளிர்பானங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இந்த உணவுப் பொருட்கள் பெரும்பாலும் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்களைக் கொண்டு விளம்பரப்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் குழந்தைகளை குறிவைத்தே விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லாமல், ‘இது உடல் நலத்துக்கு நல்லது’ என்று விளம்பரப்படுத்தப்பட்டு துரித உணவுகள் விற்கப்படுகின்றன என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், எந்த ஒரு தயாரிப்பாளரும் தங்கள் தயாரிப்புகளில் அதிக அளவு உப்பு, சர்க்கரை அல்லது கொழுப்பு சேர்க்கப்படுவது குறித்த விவரங்களை வெளியிடுவதில்லை. குறிப்பாக, பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகளான உருளைக்கிழங்கு சிப்ஸ், பிஸ்கட்டுகள் மற்றும் பிரெளன் பிரெட் ஆகியவை இதில் அடங்கும்.

பொதுநலனுக்கான ஊட்டச்சத்து ஆதரவு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் அருண் குப்தா கூறுகையில், ‘இத்தகைய உணவுப் பொருட்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006 மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 ஆகியவற்றை மீறும் வகையிலேயே தயாரிக்கப்பட்டு, சந்தையில் விளம்பரம் மூலம்  பிரச்சாரம் செய்யப்பட்டு விற்வனை செய்யப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com