

அந்த காலத்தில் 80 ,90 வயதுகளிலும் நிமிர்ந்த நன்னடையுடன் தன் வேலைகளை தானே செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு காரணம் அவர்களின் ஆரோக்கியமான உணவு முறை மற்றும் சோர்வுறாத உடல் இயக்கங்கள்.
ஆனால் இந்த காலத்தில் 30 வயதுகளிலேயே இளமை குறைந்து 40 வயதுகளில் வாழ்க்கையின் மேல் ஒரு விரக்தியே வந்து விடுகிறது. காரணம் சத்தற்ற துரித உணவுகளும், உடல் இயக்கமே இல்லாத கணினி பணிகளும் மற்றும் உடல் இயங்க தேவையற்ற வாழ்க்கை வசதிகளும் பெருகிவிட்டது தான்.
அதிலும் 40 வயதுக்கு மேல் ஆண் பெண் பாகுபாடின்றி உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், தசை வலிமையை காக்கவும், எலும்பு வலிமையை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும் சில உடற்பயிற்சிகள் மிக முக்கியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
40 வயதுக்கு மேல் என்ன மாதிரி உடற்பயிற்சிகள் செய்தால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க முடியும்? இதோ உங்களுக்காகவே 40 லும் இளமையாக உணர 5 வகையான எளிய சீக்ரெட் உடற்பயிற்சிகள் இங்கு.
1. நடைபயிற்சி (Brisk Walking)
நாங்கள் தினமும் வீடு அலுவலகங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பது தவறான கருத்து. நடப்பதற்கென்றே நேரம் ஒதுக்கி தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். நடக்கும்போது முன்னோக்கி நடப்பது பின்னோக்கி நடப்பது பக்கவாட்டில் நடப்பது போன்றவைகளையும் கடைபிடிக்கலாம்
இதனால் இதய ஆரோக்கியம் மேம்பாடு, அதீத கொழுப்பு கரைதல், அத்துடன் சீரான மன அமைதி ஆகியவற்றை பெறலாம். குறிப்பாக மூட்டு வலியுள்ளவர்களுக்கும் ஏற்றது நடைபயிற்சி என்பது சிறப்பு.
2. யோகா (Yoga)
நடைப்பயிற்சி தவறாமல் செய்கிறோம். இதில் யோகா தனியே தேவையா என்று நினைப்பவர்கள் நிறையபேர். அதன் நன்மைகளை உணர்ந்தால் கட்டாயம் யோகா அவசியம் என்பீர்கள். வாரத்திற்கு குறைந்தது 3–4 முறையாவது தேர்ந்த யோகா பயிற்றுனர் மூலம் யோகாவை செய்தல் நலம். சூர்ய நமஸ்காரம், பிராணாயாமா மற்றும் ஆசன வகைகள் தரும் நன்மைகள் நிறைய. நெகிழ்ச்சியான மனநிலை , சீரான சுவாசம், மன அமைதி, ஹார்மோன் சமநிலை ஆகியவைகள் அதில் சில.
3. லேசான எடைப் பயிற்சி (Light Strength Training)
சிலர் வீடுகளில் எங்களுக்கான உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொல்பவர்கள் ஜிம்மிற்கு சென்று பயிற்சிகளை செய்வதும் உண்டு அதில் முக்கியமானது இந்த பயிற்சி இதில்
Dumbbell curls, squats, lunges, resistance band workouts போன்றவை அடங்கும் இதனால் தசை வலிமை, எலும்பு அடர்த்தி, மெட்டபாலிசம் மேம்பாடு ஆகிய நன்மைகளுடன் உடலின் தசை ஏற்றத்தாழ்வுகளை சீராக்கும். தசைகளை வலிமையாக்குவதால் அன்றாட பயன்பாட்டிற்கு திறமையாக செயல்பட உதவும்.உங்கள் உடல்நிலை பொறுத்து பயிற்சியாளர் கண்காணிப்பு டன் இவைகளை மேற்கொள்ளலாம்.
4. சைக்கிள் ஓட்டுதல் (Cycling)
என்னது சைக்கிள் ஓட்டுவதா? அதையெல்லாம் மறந்து வருசக்கணக்காச்சு? என்பவர்களுக்காகவே வந்துள்ளது வீட்டினுள் ஓட்டும் சைக்கிள் பயிற்சி சாதனங்கள். வெளியே ஓட்டினால் இயற்கை மேலும் நன்மை தரும். இயலாத போது வீட்டில் செய்யலாம். தினமும் 20–30 நிமிடங்கள் மெதுவாக அல்லது மிதமான வேகத்தில் இந்தப் பயிற்சி செய்யும் போது இதயம் , நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும். அத்துடன் அதிகப்படியான கலோரிகள் குறைந்து எடை சீராகவும், அதிக எடை தரும் கால்வலி நீங்கவும் உதவுகிறது.
5. நீட்சி & சமநிலை பயிற்சிகள் (Stretching & Balance Exercises)
தற்போதைய பயிற்சிகளில் Toe touch, side stretch, standing leg balance, tai chi உள்ளிட்ட இந்த பயிற்சி நிச்சயம் அவசியமாகிறது. திடீரென தோன்றும் வலி போன்றவைகளுக்கு உடனடி நிவாரணமாகவும், உடல் சமநிலை பெறவும், நெகிழ்வான மூட்டுகளுக்கும் ஏதுவாகிறது இந்தப் பயிற்சிகள். சிலர் அடிக்கடி எதிர்பாராத விதமாக கீழே விடுவதுண்டு. அதிலிருந்து பாதுகாப்பு பெற தினமும் காலை அல்லது மாலை 10–15 நிமிடங்கள் செய்யும் இந்தப் பயிற்சி உதவுகிறது.
சரி சரி. இதோ உடனே இந்தப் பயிற்சி எல்லாம் செய்யப் போகிறோம் என கிளம்பி விடாதீர்கள். அதற்கு முன் ஏதேனும் உடல்நிலை பிரச்சினைகள் (உதா: இதய நோய், மூட்டு வலி, ரத்த அழுத்தம்) இருந்தால் மருத்துவர் ஆலோசனையுடன் பயிற்சிகளைத் துவங்குவது நல்லது. இவற்றுடன் தேவையான தண்ணீர் பருகுதல், சத்தான உணவு பழக்கம் மற்றும் போதிய உறக்கம் மிக அவசியம் என்பதையும் கவனத்தில் வைப்பது நலம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)