எல்லா வயதினரையும் பாதிக்கும் பொதுவான ஒரு பிரச்னைதான் மலச்சிக்கல். செரிமான அமைப்பு மோசமாக பாதிப்பதே மலச்சிக்கலுக்கு காரணமாகிறது. மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட முக்கியக் காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்வது, உடல் செயல்பாடு இல்லாமை, மருந்துகள், செரிமான கோளாறுகள் மற்றும் குடல் பாக்டீரியாகளின் ஏற்றத்தாழ்வு, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, போதுமான தூக்கம் இல்லாமை ஆகியவை யாகும். மலச்சிக்கலைத் தீர்க்கும் 5 வகையான உணவு வகைகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. ஆப்பிள்: ஆப்பிள் மற்றும் அதன் தோலில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ள நல்ல மூலக்கூறுகள் இருப்பதால் இது மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கலை சரி செய்யும். இது தவிர, ஆப்பிள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லதாகும்.
2. உலர்ந்த பிளம்ஸ்: உலர்ந்த பிளம்ஸில் உள்ள கரையாத நார்ச்சத்து சர்ஃபிடால் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் மலச்சிக்கல் பிரச்னையை விரைவில் சரி செய்யும். தினமும் இரண்டு அல்லது மூன்று உலர்ந்த பிளம்சை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஜூஸாகவும் குடிப்பதால் இது வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கலை போக்குகிறது.
3. ஆளி விதைகள்: ஆளி விதைகளில் உள்ள நார்ச்சத்து குடலில் இருந்து தண்ணீரை உறிஞ்சி ஒரு ஜெல்லை உருவாக்கி மென்மையாகவும் எளிதாகவும் மாறி வெளியேறுகிறது. தினசரி உணவில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் ஆளி விதைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்னையை சரிசெய்யலாம்.
4. ஆரோக்கியமான கொழுப்புகள்: மலச்சிக்கல் பிரச்னையை சரிசெய்ய ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், சூரை வகை மீன்கள், தேங்காய், நெய், நட்ஸ் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதால், இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் குடலில் ஏற்படும் சுருக்கத்தை சரிசெய்து எளிதாக குடல் இயக்கம் பெற்று, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
5. காய்கறிகள்: கீரை, புரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கல் பிரச்னையை சரி செய்வதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
மேற்கூறிய ஐந்து வகை உணவுகளும் மலச்சிக்கல் பிரச்னையை தீர்க்கும் அருமருந்துகளாகும்.