‘ஒருவர் உடலின் உட்புற ஆரோக்கியத்தை தெரிந்துகொள்ள அவரது தொப்புளைப் பார்த்தாலே போதும்’ என முன்னோர்கள் சொல்வார்கள். அதில் தெரியும் மாற்றங்களை வைத்தே உங்கள் உடலுக்கு என்ன பிரச்னை இருக்கக்கூடும் என்பதைக் கூறி விடுவார்கள். மிக முக்கியமாக, குழந்தை பிறக்கும்போது தொப்புள் கொடி நம்மை தாயுடன் இணைக்கிறது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. இந்த தொப்புள் கொடி தாயிடமிருந்து கருவுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்த நாளங்களுக்கு ஒரு நங்கூரப் புள்ளியாக செயல்படுகிறது. தொப்புள் கொடியைச் சுற்றியுள்ள இணைப்புத் திசு அதைப் பாதுகாக்க உதவுகிறது.
தொப்புள் கொடியில் பொதுவாக மூன்று இரத்த நாளங்கள் இருக்கும். ஒன்று கருவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்லும் தொப்புள் கொடி. ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தம் மற்றும் கழிவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் இரண்டு தொப்புள் தமனிகள் உள்ளன.
குழந்தை பிறந்த பிறகு இந்தத் தொப்புள் கொடி குழாய்கள் இயற்கையாகவே மூடிக்கொள்ளும். ஆரம்பத்தில் பிறந்த குழந்தையின் வயிற்றில் இருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. அதை வைத்து குழந்தைக்கு ஏதேனும் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம். அது பல்வேறு நோய்களைக் கண்டறிவதற்கான இடமாகவும் உள்ளது.
நமது உடலில் ஏற்படும் சில உடல்நலக் கோளாறுகளைக் கண்டறிவதில் தொப்புள் கொடி முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்கள் தொப்புளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். நம்முடைய மூதாதையர்கள், பச்சிளம் குழந்தையின் தொப்புள் கொடி மகிமையைப் பற்றி நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள். அதனால்தான், ‘தொப்புள் கொடி தாயத்து’ என்று குழந்தைகளுக்குக் கட்டிவிடுவார்கள்.
பிறந்த குழந்தையின் வயிற்றில் சிறிதளவு தொப்புள் கொடி இருக்கவே செய்யும். இது காலப்போக்கில் காய்ந்து விழுந்து விடும். அந்தக் காய்ந்த தொப்புள் கொடியைத்தான், தாயத்துக்குள் வைத்து அந்தக் குழந்தைகளின் கழுத்து, கை, இடுப்புப் பகுதிகளில் கட்டுவார்கள். ஒருசிலர் தொப்புள் கொடியை காயவைத்து அரைத்து பவுடராக்கியும் தாயத்துக்குள் வைப்பார்கள்.
இதற்குக் காரணம், அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு, ஏதாவது கொடிய நோய் தாக்கிவிட்டால், தாயத்துக்குள்ளிருக்கும் தொப்புள் கொடி பவுடரை, நீரில் கரைத்து தருவார்களாம். இதனால் அந்த கொடிய நோய் நீங்கிவிடுமாம். இதனை பலரும் மூடநம்பிக்கை என்றே கருத்து சொன்னார்கள். ஆனால், அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு, புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தாலும், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம் என்று இன்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
குழந்தை பிறந்ததுமே அதன் தொப்புள் கொடியிலுள்ள, சுமார் 80 மி.லி. இரத்தத்தை தொப்புள் கொடி இரத்தம் (Umbilical cord blood) என்பார்கள். இந்த இரத்தத்தில் ஏராளமான ஆதார செல்கள் (ஸ்டெம் செல்கள்) உள்ளன. இந்த ஆதார செல்களிலிருந்து உடலின் உறுப்புகளை உருவாக்கலாம். இந்த இரத்த ஆதார செல்களை குழந்தை பிறக்கும்போது தொப்புள் கொடியிலிருந்து பிரித்தெடுத்து, பத்திரமாக வைத்துகொண்டால், இரத்த சம்பந்தமாக ஏற்படும் 80க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கலாம். இந்த சேமித்த ஆதார செல்களைப் பயன்படுத்தி அந்த குழந்தையையோ அல்லது இது பொருந்தக்கூடிய மற்ற குழந்தையையோ குணமாக்கி விடலாம்.
குழந்தையின் அழுகை, இதயத்துடிப்பு, ஸ்பரிசம் போன்ற அனைத்துமே நார்மலாக இருக்கும்பட்சத்தில், கடைசியாகத்தான் தாயிடமிருந்து குழந்தையின் தொப்புள்கொடியை டாக்டர்கள் பிரிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தொப்புள் கொடியை வெட்டுவதற்கு முன்பு, குழந்தையின் இதயத்துடிப்பில் வித்தியாசமான சத்தம் கேட்கிறதா? குழந்தைக்கு வேறு ஏதாவது பிரச்னை உள்ளதா? என்பதையெல்லாம் துல்லியமாக அறிந்து, உறுதி செய்த பிறகே வெட்டுவார்கள். ஒருவேளை, பிறக்கும்போதே குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு வந்தால், தொப்புள்கொடி மூலமாகத்தான் இரத்தம் மற்றும் மருந்து செலுத்த முடியும். இத்தனை விஷயங்கள் உள்ளதால், மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே தொப்புள்கொடியை வெட்ட முடியும்.