நம்முடைய செரிமான அமைப்பில் இயற்கையாகவே உருவாகும் ஒரு பொருள் தான் யூரிக் அமிலம். இது அதிகமாக வெளியாவதற்கு சில பியூரின் நிறைந்த உணவுகளே காரணமாக உள்ளது. எனவே இத்தகைய உணவுகளை அதிகமாக உட்கொண்டால், உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து, பல பாதிப்புகளை உண்டாக்கும். இது உடலில் அதிகமானால் மூட்டு வலி, தசை வலி, மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
எனவே இயற்கையாகவே யூரிக் அமில பாதிப்பைக் குறைக்க சில பழங்கள் நமக்கு உதவுகிறது. அவை என்னென்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது உடலில் படிந்துள்ள யூரிக் அமிலத்தை அகற்ற உதவும். மேலும் இவற்றில் நிறைந்துள்ள நார்ச்சத்து, வளர்ச்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தினசரி இவ்வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மூலமாக மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் வீக்கம் போன்றவற்றைக் குறைக்கலாம்.
2. வாழைப்பழம்: யூரிக் அமில பாதிப்பு உள்ளவர்கள் வாழைப்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் வாழைப்பழத்தை உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கிறது. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம், உடலின் யூரிக் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் செரிமான அமைப்பை சிறப்பாக்கி மலச்சிக்கல் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது.
3. செர்ரி பழம்: யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் செர்ரி பழத்திற்கு உண்டு. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், யூரிக் அமில பாதிப்பால் ஏற்பட்ட வீக்கங்களைக் குறைக்க உதவும்.
4. ஆப்பிள்: ஆப்பிள் பழத்தை உட்கொள்ளும்போதும் யூரிக் அமில அளவு குறையும். இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். குறிப்பாக ஆப்பிளில் உள்ள மாலிக் என்னும் அமிலம், யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகளை நீக்குகிறது.
5. அன்னாசிப் பழம்: யூரிக் அமில பிரச்சனையில் இருந்து விடுபட அன்னாசி பழம் பெரிதும் உதவும். இதில் உள்ள என்சைம்கள் புரதங்களை உடைத்து வீக்கத்தைக் குறைக்க உதவும்.