வாக்கிங் போக நேரமில்லையா? வார இறுதி நாட்களில் கடற்கரைக்கு மட்டும் போங்க போதும்! ஏன் தெரியுமா?

Sunset stroll on a tranquil beach
Beach WalkingImg credit: AI Image
Updated on

கடற்கரையில் அமர்ந்து இயற்கையாக காற்று வாங்குவது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதேபோல் கடற்கரை மணலில் வெறும் கால்களுடன் நடப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த வழிமுறையாகும். கடற்கரை மணலில் வெறும் காலுடன் நடக்கும் இயற்கை நடைப்பயிற்சியின் 5 ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் காண்போம்.

பாத தசைகளை பலப்படுத்துகிறது:

கடற்கரையில் சமமற்ற மண் தளத்தில் வெறும் காலுடன் நடப்பது, சமமான தரையில் நடப்பதை விட பாதங்களுக்கு அதிக உழைப்பைக் கொடுத்து பாத தசைகளை பலப்படுத்துகிறது. மேலும், பாத தசைகளில் வலிமையையும் நெகிழ்வுத் தன்மையும் மேம்படுத்தி பாதம் தொடர்பான நீண்டகால பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது.

சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது:

கடற்கரையின் நகரும் மணலில் நடக்கும் போது உடல் நிலைத்தன்மையை தொடர்ந்து பராமரிக்க செய்வதோடு, மைய தசைகளை (Core muscles) ஈடுபடுத்தி 'ப்ரோப்ரியோசெப்ஷன்' எனப்படும் உடல் அசைவு மற்றும் நிலையை உணரும் திறனையும் மேம்படுத்துகிறது. இதனால் உடலின் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு திறன் மேம்பாடு அடைகிறது.

மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது:

கடற்கரை மணலில் இயற்கை காட்சிகளை ரசித்தபடியே நடக்கும்போது மனநிலை மகிழ்ச்சிகரமாக மாறி மன அழுத்தம் குறைகிறது. மேலும், மேம்பட்ட மனநிலையுடன் தொடர்புடைய செரோடோனின் உற்பத்தியை இயற்கை ஒளி உடலில் படும்போது அதிகரிக்கச் செய்கிறது. கடல் அலைகளின் சீரான ஓசை மனதை அமைதிப்படுத்தி பதற்றத்தையும் குறைக்கிறது.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது:

திடமான தரையில் நடப்பதை விட கடற்கரையின் நகரும் மணலில் நடக்கும் போது அதிகமான உழைப்பு தேவைப்படுவதால் இது ஒரு வகையான எதிர்ப்பு பயிற்சிக்கு (Resistance Training) ஒப்பானதாகக் கருதப்படுகிறது. மேலும், இதனால் கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து சுழற்சியை தூண்டி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
சூரிய வெளிச்சத்தில் ஏன் கண்கள் கூசுகிறது? இயற்கையின் விசித்திரமான செயல்முறை!
Sunset stroll on a tranquil beach

வைட்டமின் D பெற உதவுகிறது:

கடற்கரையில் சூரிய ஒளியில் சரியான சூரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் வெறும் காலில் நடக்கும் போது எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் D சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மேலும் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் அல்லது உணவு மாற்றங்கள் இல்லாமல் எலும்புகளை வலுவாக வைத்திருக்க வெறும் காலுடன் கடற்கரை மணலில் நடக்கும் இயற்கை நடைப்பயிற்சி உதவிகரமாக உள்ளது.

கடற்கரை மணலில் வெறும் காலுடன் நடப்பது 'கரும்பு தின்ன கூலியா' என்பது போல இயற்கை அழகை இதமாக ரசிப்பதுடன் உடல் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாக்கும் நடைப்பயிற்சியாக இருக்கிறது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com