
குடும்பத்தை கவனமாக பார்த்துக் கொள்ளும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் உடல் நலத்தில் போதிய கவனம் செலுத்துவதில்லை. இதனால் உடல்நலப் பிரச்னையால் அவஸ்தைப்படுகிறார்கள். எனவே, பெண்கள் குறிப்பிட்ட கால இடைவேளையில் சில பரிசோதனைகள் செய்துக் கொள்வதால் உடல் சார்ந்த பெரும் பிரச்னைகள் வரும் முன்னரே தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். அவை என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.
1. புற்றுநோய் பரிசோதனை
புற்றுநோய் பிரச்னை பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. பல பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. இளம் வயது பெண்களுக்கு கூட இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. அதனால் 20 வயதிற்கு மேலான பெண்கள் கருப்பை புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 40 வயதைக் கடந்த பெண்கள் மார்ப்பக புற்றுநோய்க்கான பரிசோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
2. கண் பார்வை பரிசோதனை
பெண்கள் கண் பார்வையை பரிசோதனை செய்துக் கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை. கண் பார்வை சிறிது சரியாக இல்லாத போதே பரிசோதிக்காமல் அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். இதனால் நாளடைவில் கண் பார்வை பிரச்னை அதிகரித்து விடுகிறது. பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. கண்ணாடி அணியும்படி மருத்துவர் பரிந்துரைக்கும் பெண்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண்களை பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.
3. தைராய்டு பரிசோதனை
நம்முடைய கழுத்துப்பகுதியில் அமைந்திருக்கும் தைராய்ட் சுரப்பியின் முக்கியமான வேலை தைராக்ஸின் ஹார்மோனை சுரப்பதாகும். இந்த ஹார்மோன் அதிகமாக சுரந்தால் ஹைப்பர் தைராடிசம் என்ற பாதிப்பும், குறைவாக சுரந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்ற பிரச்னையும் உருவாகும். எனவே, ஆரம்பத்திலேயே இந்த சுரப்பியால் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்தால், சுலபமாக தைராய்ட் பிரச்னையை குணமாக்க முடியும். கழுத்தில் வீக்கம், கட்டியிருப்பது பெரும்பாலும் தைராய்டு கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. பரிசோதனையின் மூலமாக இதை கண்டறிய முடியும். இதை ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்து விட்டால் நோய் பாதிப்பின் வீரியத்தை கட்டுப்படுத்த முடியும்.
4. எலும்பு அடர்த்தி சோதனை
எலும்புகள் பலவீனம் அடைவதால் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. எலும்புகளின் அடர்த்தியில் மாறுப்பாடு ஏற்படும் போது கடுமையானபாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஆகவே, எலும்பினுடைய அடர்த்தியை முன்கூட்டியே பரிசோதனை செய்து அறிந்துக் கொண்டால் இந்த பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். பெண்கள் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை இந்த பரிசோதனையை செய்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதிலும் 65 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
5. கொழுப்பு பரிசோதனை
ரத்தத்தில் கெட்ட கொழுப்பு சேர்ந்தால் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இதனால் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கொழுப்பு அளவை கண்டறிவது மிகவும் அவசியமாகும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கொழுப்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 20 வயதை கடந்த பெண்கள் இந்த பரிசோதனையை செய்வது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)