
கோடை காலத்தில் வெயிலின் கடுமையை போக்கி உடலை குளிர்விப்பதில் இளநீரும், தர்பூசணியும் முக்கிய பங்கு வைக்கின்றன. இதில் தர்ப்பூசணியில் காணப்படும் அதிகப்படியான சாறு தாகத்தை தீர்க்கிறது. ஆனால் இந்த தர்பூசணி பழத்தை சிலர் சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது. அந்த வகையில் தர்பூசணி சாப்பிடக்கூடாத 5 பேர் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. சர்க்கரை நோய் உள்ளவர்கள் : இனிப்பை கவனியுங்கள்!
இயற்கையாகவே தர்பூசணியில் சர்க்கரையின் அளவு கணிசமாக உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் தர்பூசணி சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கக்கூடும். ஆகவே நீரிழிவு நோயாளிகள் தர்பூசணி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி சிறிதளவு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
2. சிறுநீரக நோயாளிகள்: பொட்டாசியம் ஜாக்கிரதை!
பொட்டாசியம் சத்து அதிக அளவில் உள்ளதால் சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் தர்பூசணியை உட்கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. ஆரோக்கியமான சிறுநீரகங்கள் உடலில் உள்ள அதிகப்படியான பொட்டாசியத்தை வெளியேற்றிவிடும். ஆனால், சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, பொட்டாசியம் உடலில் தங்கி இதயப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்பதால் சிறுநீரக நோயாளிகள் தர்பூசணியை தவிர்ப்பதே நல்லது.
3. வயிற்று உபாதைகள் உள்ளவர்கள்: நார்ச்சத்து வேண்டாம்!
தர்பூசணியில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் அதாவது வயிற்றுப்போக்கு அல்லது பிற செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் தர்பூசணியை தவிர்ப்பது நல்லது.
4. மூட்டு வலி இருப்பவர்கள்: குளிர்ச்சியைத் தவிருங்கள் !
தர்பூசணி குளிர்ச்சித் தன்மை கொண்டதாக இருப்பதால் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு இதனை உட்கொள்ளும்போது, வலி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இவர்கள் தர்பூசணியை தவிர்ப்பது அல்லது மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.
5. இதய நோயாளிகள்: நீர்ச்சத்தை கவனியுங்கள்!
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து இதயத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம் என்பதால் இதய நோய் உள்ளவர்கள் தர்பூசணியை உட்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி தர்பூசணியை உட்கொள்வது பாதுகாப்பானது.
மேற்கூறிய உடல்நல பிரச்சனை இல்லாதவர்களுக்கு கூட தர்பூசணி சாப்பிடுவதால் வயிறு உப்புசம், வாயுத் தொல்லை மற்றும் வயிற்று வலி பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் எந்த உணவாக இருந்தாலும் அளவோடு உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.