உடலில் எல்லா இயக்கங்களும் சீராக நடப்பதற்கு உடலுக்கு தினசரி போதுமான அளவு விட்டமின்களும், கனிமச்சத்துகளும் தேவை. குறிப்பாக விட்டமின்கள் நமது உடலில் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாகும். தினசரி நமக்கு பலவகையான விட்டமின்கள் தேவை. ஒவ்வொரு விட்டமினும் உடலின் தனித்தனி உறுப்புகளின் செயல்பாட்டிற்கு அவசியமானது. இதில் விட்டமின் A சத்து நமது கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது கொழுப்பில் கரையக்கூடிய விட்டமினாகும். விட்டமின் ஏ உடலில் போதிய அளவு இல்லை என்றால் அதன் விளைவாக ஒரு சில பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த பதிவில் உடலில் விட்டமின் ஏ குறைந்தால் ஏற்படும் அறிகுறிகள் என்னவெனத் தெரிந்து கொள்ளலாம்.
1. கண் பார்வை பாதிப்பு: கண்ணின் ஆரோக்கியத்திற்கு விட்டமின் ஏ இன்றியமையாதது. எனவே விட்டமின் ஏ உடலில் குறைவாக இருந்தால் அதன் விளைவாக கண்பார்வையில் பிரச்சனைகள் ஏற்படும். இதனால் கண்கள் வறண்டு போதல், மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படலாம்.
2. உடல் சோர்வு: விட்டமின் ஏ உடலின் ஆற்றல் சீராக இருக்க உதவும். இது உடலில் குறைவாக இருந்தால் களைப்பு, சோர்வு, நாள் முழுவதும் ஒரு மாதிரி சோம்பலாகவே இருக்கும். எனவே உங்களுக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
3. திடீர் எடை இழப்பு: திடீரென்று உங்களுக்கு உடல் எடை குறையத் தொடங்கினால், அதுவும் வேகமாக உடல் எடை குறைந்தால், அதற்கு விட்டமின் ஏ குறைபாடும் காரணமாக இருக்கலாம். எனவே உடல் எடை குறைவதை நினைத்து சந்தோஷப்படாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது. இதை கண்டு கொள்ளாமல் விட்டால் தீவிர உடல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
4. சருமம் வறண்டு போதல்: சருமத்தின் ஆரோக்கியத்திற்கு விட்டமின் ஏ சத்து மிகவும் அவசியம். ஒருவருக்கு விட்டமின் ஏ குறைவாக இருந்தால் அதன் விளைவாக சருமத்தில் எரிச்சல், அரிப்பு, தடிப்புகள் மற்றும் வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே நீங்கள் திடீரென சரும வறட்சி, அரிப்பு போன்றவற்றை சந்திக்க நேர்ந்தால், அதற்கு விட்டமின் ஏ குறைபாடும் காரணமாக இருக்கலாம்.
5. நோய்த் தொற்று பாதிப்பு: உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், பராமரிக்கவும் விட்டமின் ஏ அவசியம். விட்டமின் ஏ குறைபாட்டால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து, அடிக்கடி நோய்த் தொற்றுக்களால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் விட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருப்பின் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். உடல் சார்ந்த விஷயங்களில் எதையும் சாதாரணமாக நினைக்க வேண்டாம். சில பிரச்சனைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் விரைவில் குணப்படுத்த முடியும், உங்களது அலட்சியம் சில சமயங்களில் மீண்டு வர முடியாத நிலைக்கு உங்களைத் தள்ளிவிடலாம். எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியாக இருங்கள்.