8 மணி நேரம் தூங்கியும் "ஜாம்பி" மாதிரி எந்திரிக்கிறீங்களா? ஜப்பானியர்களின் 5 தூக்க ரகசியங்கள்!

sleep
Sleep
Published on

நம்மில் பலர் தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்கினாலும், காலையில் எழும்போது மிகவும் சோர்வாக உணர்கிறோம். ஒரு "ஜாம்பி" போல எழுந்து, காபி அல்லது டீ குடித்தால் ஒழிய நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடிவதில்லை. இதற்குக் காரணம், நாம் எத்தனை மணி நேரம் தூங்குகிறோம் என்பதை விட, எப்படித் தூங்குகிறோம் என்பதுதான் முக்கியம்.

ஜப்பானிய மக்கள் தங்கள் தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கப் பல நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான், சில சமயம் அவர்கள் குறைவாகத் தூங்கினாலும், நம்மில் பலரை விட அதிக ஆற்றலுடன் காணப்படுகிறார்கள். அந்த 5 ஜப்பானிய ரகசியங்கள் என்னவென்று பார்ப்போம்.

1. இரவு வெந்நீர் குளியல் (Oforo)

ஜப்பானியர்கள் இரவில் தூங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன், 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் குளிப்பார்கள். இதற்கு 'ஒஃபுரோ' (Oforo) என்று பெயர். இப்படிச் செய்வதால், நமது உடலின் மைய வெப்பநிலை சற்று உயர்ந்து, குளித்து முடித்தபின் 2 முதல் 3 டிகிரி வரை வேகமாகக் குறையும். உடல் இப்படி குளிர்ச்சி அடைவது, மூளைக்குத் தூக்கத்தைத் தூண்டும் ஒரு சிக்னல் போலச் செயல்பட்டு, நம்மை வேகமாக ஆழமான தூக்கத்திற்குக் கொண்டு செல்லும். குளிக்க முடியாவிட்டாலும், 'அஷி-யூ' (Ashi-yu) எனப்படும் முறையில், வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் கால்களை வைத்திருப்பதும் இதே பலனைத் தரும்.

2. குறைவான இரவு உணவு (Yūshoku)

நல்ல தூக்கத்திற்கும், செரிமானத்திற்கும், இரவு உணவு ('யூஷோகு' - Yūshoku) மிகவும் குறைவாகவும் எளிதாகவும் இருக்க வேண்டும். இரவில் அதிகமாகச் சாப்பிடுவது அல்லது வறுத்த, பொரித்த உணவுகளைச் சாப்பிடுவது, நெஞ்செரிச்சலை உண்டாக்கி, தூக்கத்தைக் கெடுக்கும். ஜப்பானியர்கள் "ஹரா ஹச்சி பூ" (Hara Hachi Bu) என்ற ஒரு கருத்தைப் பின்பற்றுகிறார்கள். அதாவது, வயிறு வெடிக்கும் அளவிற்குச் சாப்பிடாமல், 80% வயிறு நிரம்பியதும் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வெயில் பட்டு கை கருத்துப் போச்சா? வீட்டிலேயே சன் டேன் நீக்க 5 சூப்பர் வழிகள்!
sleep

3. குளிர்ச்சியான அறை வெப்பநிலை

வெயில் காலத்தில் வேர்த்துக்கொட்டி அவதிப்படுவதை விட, குளிர்காலத்தில் நாம் நிம்மதியாகத் தூங்குவோம். காரணம், தூக்கத்திற்குச் சற்று குளிர்ச்சியான அறை வெப்பநிலையே சிறந்தது. ஜப்பானியர்களின் படுக்கையறை வெப்பநிலை சராசரியாக 13 முதல் 17 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். தூக்க விஞ்ஞானி மேத்யூ வாக்கர் கூறுவது போல, நமது மூளை ஆழமான தூக்கத்திற்குச் செல்ல, அது 2-3 டிகிரி குளிர்ச்சி அடைய வேண்டும். எனவே, ஏசி அல்லது ஃபேனைப் பயன்படுத்தி அறையைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம்.

4. சரியான படுக்கை

நாம் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதியைத் தூக்கத்தில்தான் கழிக்கிறோம். பலர், பஞ்சு போன்ற மென்மையான படுக்கைகள்தான் தூக்கத்திற்கு நல்லது என நினைக்கிறார்கள், ஆனால் அது தவறு. நமது முதுகெலும்பிற்கு ஆதரவு தான் தேவையே தவிர, மென்மை தேவையில்லை. மென்மையான படுக்கைகள் முதுகு மற்றும் கழுத்து வலியை உண்டாக்கும். ஜப்பானியர்கள் 'ஃபூட்டான்' எனப்படும் மெல்லிய படுக்கை அல்லது 'தடாமி' எனப்படும் உறுதியான பாய்களையே பயன்படுத்துகிறார்கள். இது முதுகெலும்பிற்கு நல்ல ஆதரவைத் தருகிறது.

இதையும் படியுங்கள்:
மதியம் சாப்பிட்ட பிறகு தூக்கம் வருகிறதா? அச்சச்சோ, இது நல்லதில்லையே!
sleep

5. குட்டித் தூக்கம் (Inemuri)

மதியம் 1 மணி முதல் 3 மணி வரை நமக்குச் இயற்கையாகவே சற்றுத் தூக்கம் வரும். இந்த நேரத்தில் 5 முதல் 20 நிமிடங்கள் வரை ஒரு குட்டித் தூக்கம் போடுவது உங்களை மீண்டும் புத்துணர்ச்சி அடையச் செய்யும். ஜப்பானில் இந்த முறைக்கு 'இனெமுரி' (Inemuri) என்று பெயர். இது வேலையின்போது தூங்குவதைச் சோம்பேறித்தனமாகப் பார்க்காமல், கடின உழைப்பிற்கான ஒரு பரிசாகப் பார்க்கிறது. ஆனால், இந்தத் தூக்கம் 20 நிமிடங்களுக்கு மேல் செல்லக்கூடாது, அப்படிச் சென்றால் அது உங்கள் இரவுத் தூக்கத்தைப் பாதிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com