மழைக்காலத்தில் அதிகமாக பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பலருக்கும் நோய்தொற்று மற்றும் சுவாசப் பிரச்னைகள் ஏற்படக் காரணமாக அமைகிறது. அதைப் போக்குவதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
மழைக்காலத்தில் கொசுக்கள், தண்ணீர் மற்றும் காற்றின் மூலமாக நோய்கள் ஏற்படக்கூடும். கொசுக்கள் மூலமாக மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா ஆகிய நோய்த்தொற்று ஏற்படும். தண்ணீர் மூலமாக டைபாய்ட், காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும். காற்றின் மூலமாக சளி, ஜுரம், இருமல், தொண்டை வலி போன்ற பிரச்னைகள் வரக்கூடும். மழைக்காலத்தில் வீடுகளின் ஈரப்பதம் காரணமாக அதிகமாக பூஞ்சை தொற்று உருவாகக்கூடும்.
1. டிஹைமிடிஃபையர்: நம்முடைய வீடுகளில் உள்ள காற்றை மழைக்காலத்தில் ஈரப்பதம் இல்லாமல் வைத்துக்கொள்ள Dehumidifierஐ பயன்படுத்தவும். டிஹைமிடிஃபையர் என்பது ஒரு ஏர் கண்டிஷனிங் சாதனமாகும். இது காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவைக் குறைத்து பராமரிக்கிறது. மூச்சு விட சிரமப்படும் நபருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
2. வீட்டைப் பராமரித்தல்: சுவர்களில் ஈரப்பதம் தங்காதவண்ணம் மழைக்காலத்திற்கு முன்பே சரிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். பாத்ரூம் மற்றும் கிச்சனை ஈரமாக வைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. வீட்டினுள் வைத்திருக்கும் செடிகளை மழைக்காலம் முடியும் வரை வெளியே வைத்து விடுவது சிறந்தது. பாத்ரூமை அடிக்கடி Bleach, disinfectant, Detergent பயன்படுத்தி சுத்தம் செய்வது அவசியமாகும்.
3. உணவு முறை: மழைக்காலத்தில் சூப், மூலிகை டீ போன்றவற்றை அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமில்லாமல், ஜீரணத்திற்கும் நல்லதாகும். உணவில் இஞ்சி, பூண்டு, மஞ்சள்,மிளகு ஆகியவற்றில் அதிக ஆன்டி பாக்டீரியல் திறன் இருப்பதால், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். மழைக்காலத்தில் தூய்மையான காய்ச்சிய நீரை அருந்துவது நல்லது. வெளியிடங்களில் உணவுகளை வாங்கி சாப்பிடாமல் வீட்டிலேயே சமைத்து உண்பது நோய்தொற்று வராமல் தடுக்கும்.
4. மூச்சுப் பயிற்சி: மூச்சு விடுவதில் சிரமம் இருப்பவர்கள் தினமும் மூச்சுப் பயிற்சியை செய்வது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனால் மூச்சு சம்பந்தமான பிரச்னைகள் குணமாகும்.
5. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல்: நம்முடைய வீட்டையும், நம்மை சுற்றியுள்ள இடத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது மழைக்காலத்தில் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். நம் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கியிருக்காமல் பார்த்துக்கொள்வது கொசுக்கள் உருவாவதைத் தடுக்கும். குப்பைகளை வீட்டில் சேர விடாமல் அவ்வப்போது வெளியேற்றிவிடுவது நோய் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழியாகும். இந்த 5 டிப்ஸையும் கடைப்பிடித்து மழைக்காலத்தை சிறப்பாகக் கையாளுவோம்.