

சூப்பர் மார்க்கெட் சென்றால் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த வண்ணமயமான தின்பண்டங்களை பார்த்தவுடன் நமக்கே அறியாமல் ஒரு ஆசை வந்துவிடும். அதிலும் குழந்தைகள் கேட்டால் வேண்டாம் என்று சொல்ல மனம் வராது. ஆனால் இப்படி ருசிக்காக நாம் வாங்கி சாப்பிடும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்குள் பல கொடிய ரசாயனங்கள் ஒளிந்திருக்கின்றன என்பது அதிர்ச்சியான ஒரு உண்மை.
நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காகவும் சுவையை கூட்டுவதற்காகவும் சேர்க்கப்படும் இந்த ரசாயனங்கள் நமது உடலுக்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்கின்றன. அப்படி பாக்கெட் உணவுகளில் கலக்கப்படும் 5 மிக ஆபத்தான நச்சுப் பொருட்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
1. செயற்கை இனிப்பூட்டிகள் (High Fructose Corn Syrup)!
கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகள் சாக்லேட்கள் மற்றும் இனிப்பு வகைகளில் சுவையை அதிகரிக்க இந்த செயற்கை இனிப்பூட்டிகள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. சாதாரண சர்க்கரையை விட இது பல மடங்கு ஆபத்தானது. இதை தொடர்ந்து சாப்பிடும் போது உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பல மோசமான பிரச்சனைகள் மிக எளிதாக வந்துவிடும்.
2. டிரான்ஸ் கொழுப்புகள் (Trans Fats)!
பேக்கரிகளில் விற்கப்படும் கேக் பிஸ்கட் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் போன்ற மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் வகைகளில் இந்த டிரான்ஸ் கொழுப்புகள் தாராளமாக கலக்கப்படுகின்றன. பொருட்கள் பல மாதங்கள் கெட்டுப்போகாமல் கிரிஸ்பியாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது நேரடியாக நமது ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கு வழி வகுக்கும்.
3. சோடியம் நைட்ரைட் (Sodium Nitrite)!
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளில் அவை நீண்ட நாட்கள் பிரெஷ்ஷாக இருப்பதை போல காட்ட இந்த சோடியம் நைட்ரைட் என்ற கெமிக்கலை சேர்க்கிறார்கள். இதை சேர்த்தால் பார்ப்பதற்கு இறைச்சி செக்கச்சிவந்த நிறத்தில் அருமையாக இருக்கும். ஆனால் இதை தொடர்ந்து சாப்பிட்டால் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று பல மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
4. செயற்கை நிறமிகள் (Artificial Food Colors)!
உணவுப் பொருட்களை பார்த்த உடனே சாப்பிட தூண்டும் வகையில் மாற்றுவதற்காக பல வகையான செயற்கை வண்ணங்களை அதில் கலக்கிறார்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பலவண்ண மிட்டாய்கள் மற்றும் குளிர்பானங்களில் இது அதிக அளவில் உள்ளது. இந்த ரசாயன நிறமிகள் குழந்தைகளுக்கு கவனச்சிதறல் அலர்ஜி மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.
5. எம்.எஸ்.ஜி (MSG - Monosodium Glutamate)!
நூடுல்ஸ் சூப் பாக்கெட்டுகள் மற்றும் பல துரித உணவுகளில் சுவையை பல மடங்கு அதிகரிப்பதற்காக இந்த எம்.எஸ்.ஜி எனப்படும் ரசாயன உப்பு சேர்க்கப்படுகிறது. இதை சாப்பிடும் போது உணவு செம டேஸ்டாக இருப்பதை போல தோன்றும். ஆனால் இது தலைவலி உடல் சோர்வு மற்றும் சிலருக்கு மயக்கம் போன்ற நரம்பு ரீதியான பிரச்சனைகளை உடனே ஏற்படுத்திவிடும். இதை உணவில் இருக்கும் சைலன்ட் கில்லர் என்று கூட சொல்வார்கள்.
நமது நாக்கிற்கு அடிமையாகி உடம்பை நாசமாக்கும் இது போன்ற பாக்கெட் உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது தான் உண்மையான புத்திசாலித்தனம். கடைகளில் பொருட்களை வாங்கும் போது அதன் பின்புறம் உள்ள லேபிளை படிக்கும் பழக்கத்தை நாம் கட்டாயம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதில் இப்படிப்பட்ட ஆபத்தான ரசாயனங்களின் பெயர்கள் இருந்தால் தயவுசெய்து அதை வாங்காதீர்கள்.