சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 முக்கிய வழிகள்!

சிறுநீரகங்கள் பாதுகாப்பு: ஆரோக்கியம் பேணும் அவசிய நடவடிக்கைகள்!
சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 முக்கிய வழிகள்!

நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் சிறுநீரகங்களின் பங்கு அதிகம். கழிவுகளை நீக்குதல், திரவ சமநிலையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்தல் போன்ற செயல்பாடுகளை சிறுநீரகங்கள் செய்கின்றன. 

இன்றைய நவீன கால வாழ்க்கை முறையில் சிறுநீரகங்களை பாதுகாப்பதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலமாக சிறுநீரகப் பிரச்சனைகளின் அபாயத்தை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இந்தப் பதிவில் சிறுநீரகங்களைப் பாதுகாத்து அதன் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.  

இதையும் படியுங்கள்:
இரவில் கற்றாழை ஜெல் தடவினால் கிடைக்கும் 5 சரும நன்மைகள்!
சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 முக்கிய வழிகள்!
  1. தண்ணீர் அதிகம் குடியுங்கள்: சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் வெளியேற உதவி, சிறுநீரகத்தின் சிரமத்தைக் குறைக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 8 கப் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதுவும் கோடை காலத்தில் முடிந்தவரை அவ்வப்போது தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்திற்கு நல்லது. 

  2. ஆரோக்கிய உணவைப் பின்பற்றவும்: சீரான மற்றும் சத்தான உணவை சாப்பிடுவது சிறுநீராக ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. உங்கள் உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியக் கொழுப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சோடியம் உள்ள உணவுகள், அதிக சர்க்கரை மற்றும் அதிகப்படியான சிவப்பு இறைச்சி சாப்பிடுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். 

  3. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துங்கள்: உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பின் முக்கிய காரணங்களாகும். கட்டுப்பாடில்லாத உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்தும். அதே நேரத்தில் நீரிழிவு நோயை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால், காலப்போக்கில் சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை தவறாமல் கண்காணிக்கவும்.

  4. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்: தவறாமல் உடற்பயிற்சி செய்வது உங்கள் இருதய ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் நல்லது.  தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை பராமரிக்கப்படுகிறது. இதனால் ரத்த ஓட்டம் மேம்பட்டு உடல் பருமன், நீரிழிவு போன்ற நாள்பட்ட உடல் உபாதைகளின் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே தினசரி குறைந்தது 75 நிமிடங்கள் மிதமானது முதல் தீவிரமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். 

  5. அதிக மருந்துகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: சில மருந்துகளை அதிகமாக பயன்படுத்தும் போது சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே அத்தகைய மருந்துகளை அதிகப்படியாக அல்லது நீண்ட காலத்திற்கு பயன்படுத்தினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே நீண்ட காலத்திற்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது சுகாதார நிபுணருடன் கலந்தாலோசித்து அவற்றை எடுத்துக் கொள்வது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com