‘உன் நண்பன் யார் என்று சொல். உன்னைப் பற்றி சொல்கிறேன்’ என்பது எல்லோருக்கும் தெரிந்த உன்னதமான ஒரு வாக்கியம். நம்முடன் இருப்பவர்களுள், யார் உண்மையான நண்பர், யார் பொய்யான நண்பர் என்றே கண்டுபிடிக்க முடியாத நிலை தற்போது வந்து விட்டது. அப்படிப் பொய்யான நபர்களைக் கண்டுபிடிக்கும் 5 வழிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. எப்போதும் சோர்வான உணர்வு: நம்முடைய அனைத்துவிதமான எனர்ஜிகளும் தீர்ந்து விட்டது போல உணர்வு ஏற்படுவது, ஒருவர் அருகில் இருக்கும்போது நாம் அசௌகரியமாக உணர்வது, அந்த இடத்தை விட்டு எப்போது செல்வது போன்ற சோர்வான உணர்வுடன் இருப்பது போன்ற உணர்வினை யாருடன் இருக்கும்போது நாம் உணர்கிறோமோ அந்த நபர் போலியானவர். ஆதலால் அவரிடம் இருந்து தள்ளி இருக்கவும்.
2. உங்கள் மேல் அக்கறை இல்லாதது போன்ற உணர்வு: நாம் ஏதாவது ஒரு விஷயத்தை, அதாவது நமக்குப் பிடித்த விஷயத்தைப் பேசும்போது நண்பராக நினைத்துக்கொண்டிருக்கும் நபர், காது கொடுத்துக் கேட்காதது போல் தோன்றினால் அவர் போலியானவர். உண்மையான நண்பராக இருப்பவர்கள் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் எந்த விஷயங்களை உண்மையாகவே காது கொடுத்து கேட்பார்.
3. மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்: நாம் ஏதாவது ஒரு விஷயத்தில் வெற்றி அடையும்போது அல்லது சாதனை செய்யும்போது நண்பர் என்று நினைப்பவர், நம்முடைய சாதனை குறித்து பேசாமல், மட்டமாகப் பேசினாலோ நகைச்சுவை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தாலோ அவர் போலியானவர்.
4. வீண் விமர்சனங்கள்: பொய்யான நண்பராக நம்முடன் சுற்றிக் கொண்டிருப்பவர் நம்மை ஒரு வட்டத்தில் வைப்பதோடு, அதைத் தாண்டிப்போக நினைத்தால் வீண் விமர்சனங்கள் செய்வதோடு, நாம் தவறு செய்தாலும் அதைக் கூற மாட்டார்கள். ஆனால், உண்மையான நண்பர்கள் நம்முடைய தவறை சுட்டிக்காட்டுவர். நம்முடைய பிரச்னைகளுக்கு தீர்வு தராமல் நம்மைப் போட்டியாக நினைப்பவர் நண்பர் என்ற வேடத்தில் இருக்கும் போலியானவர்.
5. கவனத்தை அவர்கள் மீது வைத்திருப்பர்: பல பேர் இருக்கும் இடத்தில் நமக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால் தாங்கிக்கொள்ள முடியாமல் பிறரின் கவனம் அவர்கள் மீது இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் போலியான வேடத்தில் நம்முடன் இருக்கும் நண்பர்கள் ஆவர்.
மேற்கூறிய ஐந்து குணநலன்கள் இருப்பவர் போலியான நண்பர் என்பதால் அவரிடம் இருந்து விலகி இருப்பதே நமக்கு நல்லது.