பாதாம் எண்ணெய் என்பது, ‘ஆல்மண்ட் ஆயில்’ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அதோடு, இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டது என்பது பலரும் அறியாதது. பாதாம் பழங்காலத்திலிருந்தே பயிரிடப்பட்டு வருகிறது. இது சீனா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து தோன்றி, பின்னர் மத்திய தரைக்கடல் பகுதிக்குப் பரவியுள்ளது. பண்டைய எகிப்தில் பாதாம் எண்ணெய் பலராலும் அறியப்பட்டது. மேலும், ராணி கிளியோபாட்ரா தனது சருமப் பராமரிப்புக்காக இதனைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பிறகு காலப்போக்கில், பாதாம் எண்ணெய் அதன் ஊட்டச்சத்து செழுமைக்காக ஏராளமாக மதிப்பிடப்பட்டது.
தயாரிக்கப்படும் முறை: பொதுவாக, கசப்பான மற்றும் இனிப்பு பாதாம் இரண்டுமே எண்ணெய்காகப் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் பாதாமை சுத்தம் செய்து, அவற்றின் ஓடுகளை அகற்றி, விதைகளை மெதுவாக சூடாக்கி, பின்னர் அவற்றை ஒரு திருகு அழுத்தத்தில் அழுத்துவது ஆகியவை பாதாம் எண்ணெய்கான செயல்முறைகளின்கீழ் அடங்கும். இப்படிப் பெறப்படும் எண்ணெய் பின்னர் வடிகட்டுதல் உட்பட பல கட்டங்களில் சுத்திகரிக்கப்படுகிறது.
பாதாம் எண்ணெயின் 6 முக்கியப் பயன்பாடுகள்:
இதயத்தைக் காக்கும்: பாதாம் எண்ணெய் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவுகிறது. இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, இதனை நம்முடைய தினசரி உணவில் சேர்க்கும்போது, அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு (triglyceride)களைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது. இதனால் இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
சருமப் புத்துணர்ச்சி: பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ சத்துக்களின் அளவு நிறைந்திருக்கின்றன. அதோடு இது அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் மசாஜ் செய்பவர்கள் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ஒலிக் மற்றும் லினோலிக் அமிலங்கள், வைட்டமின் பி மற்றும் துத்தநாகம் ஆகியவை சருமத்தின் ஊட்டச்சத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், பாதாம் எண்ணெய் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, அழற்சி மற்றும் சருமத் தடிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. பாதாம் எண்ணெய் சருமத்திற்கு ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர். இது சருமத்தை ஹைட்ரேட் செய்து மென்மையாக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது நம்முடைய சருமத்தை புத்துயிரோடு வைத்துக்கொள்ளவும் உதவும்.
புற்றுநோய் வராமல் தடுக்கும்: ஒருசில ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி அன்றாட உணவில் பாதாம் எண்ணெயைச் சேர்ப்பது, பெருங்குடல் புற்றுநோயின் வாய்ப்புகளைக் குறைக்க உதவும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. உடலில் புற்றுநோய் செல்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆன்டி-ப்ரோலிஃபெரேடிவ் இந்த எண்ணெயில் நிறைந்து காணப்படுவதாகவும், மேலும் இது மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
நினைவாற்றலை அதிகரிக்கும்: பாதாம் எண்ணெயில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. இது நம்முடைய நினைவாற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது. அதோடு, இது மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் சோர்வு ஆகியவற்றைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இது நம்முடைய தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
முடியை வலுவாக்கும்: பாதாம் எண்ணெய் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் நம்முடைய முடியின் வலிமையையும் அடர்த்தியையும் மேம்படுத்துகிறது. அதோடு, பொடுகு தொல்லை மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சல்களையும் கூட குறைத்து, தலைக்கு ஈரப்பதமூட்டுகிறது. முடி உதிர்தல் மற்றும் கேசப் பிளவைக் குறைக்கவும் இது உதவுகிறது.
நகங்களை பலப்படுத்தும்: பாதாம் எண்ணெய் நம்முடைய நகங்களை வலுப்படுத்தவும், அவை உடையாமல் இருக்கவும் உதவுகிறது. அதாவது நகங்களை வளர்க்கவும் பாதுகாக்கவும் உதவும் ஒரு இயற்கையான க்யூட்டிகல் ஆயிலாக இதனை நாம் பயன்படுத்தலாம்.