கோடைக்காலம் வந்தாச்சு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலம் இதுவென்று கூறலாம். முக்கியமாக, வெப்ப நிலை மாற்றம் காரணமாக நம் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்போது அதை சமநிலைக்குக் கொண்டுவர என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதே முதலாவதாக நாம் செய்ய வேண்டியது. அந்த வகையில் தயிர் சேர்த்து செய்யக்கூடிய ஆறு தரமான சுவை கொண்ட உணவுகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
* ரைஸ் அல்லது நான் (Naan) போன்ற உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாக சேர்த்துக் கொள்ள உகந்தது 'தஹி சிக்பீ கறி' (Dahi Chickpea Curry). இது புரோட்டீன் சத்து அதிகம் நிறைந்தது. சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த தக்காளி, வெங்காயம், சிக் பீ, மணமுள்ள மசாலாப் பொருள்களுடன் க்ரீமி யோகர்ட் சாஸ் சேர்த்து தயாரிக்கப்படுவது இது.
* கதீ பகோரா (Kadhi Pakora) என்பது ஒரு கிளாசிக் பஞ்சாபி டிஷ். இது பகோராக்களை சுவையான யோகர்ட் கிரேவியில் ஊற வைத்து தயாரிக்கப்படும் மனதுக்கு நிறைவு தரக்கூடிய ஓர் உணவு.
* புத்துணர்வு தரக்கூடிய சைட் டிஷ்களில் ஒன்று ரைத்தா (Raita). யோகர்ட், நறுக்கிய வெள்ளரி, கேரட், புதினா இலைகள், வறுத்துப் பொடித்த சீரகத் தூள், உப்பு போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுவது. காரம், அதிக மசாலா ஆகியவை சேர்த்து சமைக்கப்பட்ட கறி வகைகளை உண்ணும்போது, குளிர்ச்சியும் க்ரீமியுமான ரைத்தாவை உடன் சேர்த்துக்கொள்ளும்போது வயிற்றுக் கோளாறுகள் வருவது தடுக்கப்படுகிறது.
* இனிப்பு சேர்த்த க்ரீமி யோகர்டை மூலப்பொருளாகக் கொண்டு, குங்குமப் பூ மற்றும் ஏலக்காய்களை சுவையூட்டிகளாகச் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பு ஸ்ரீகண்ட். இது எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளிலும் உணவுக்குப் பின் டெஸ்ஸர்ட்டாக உண்ணச் சிறந்தது.
* மாம்பழம் மற்றும் அன்னாசி பழங்களை தோல் சீவி நறுக்கி அந்த துண்டுகளை யோகர்ட்டுடன் சேர்த்து அதன் மீது சிறிது தேனையும் ஊற்றினால் ஆரோக்கியமும் புத்துணர்வும் தரும் ஒரு கிளாசிக் ஃபுரூட் ரைத்தா தயார். இதனை டெஸ்ஸர்ட்டாகவும் ஸ்நாக்ஸ்ஸாகவும் உண்டு மகிழலாம்.
* தென்னிந்தியர்களுக்குப் பிடித்த பிரதானமான உணவு தயிர் சாதம் எனலாம். சமைத்த சாதத்தில் வெள்ளரி, கேரட், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிப் போட்டு மல்லித்தழை தூவி, உப்பு, யோகர்ட் சேர்த்துக் கலந்தால் தயிர் சாதம் தயார். மணத்திற்காக எண்ணெயில் கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொட்டலாம். அலங்கரிக்க முந்திரி, கிரேப், மாதுளை முத்துக்கள் சேர்க்கலாம். குளிர்ச்சியும் ஆரோக்கியமும் தரக்கூடிய உணவு இது.
மேற்கூறியவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி உணவுடன் உட்கொண்டால் கோடையின் வெப்பத்தை சுலபமாக சமாளிக்கலாம்.