ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவர்களுக்கு சரியான உணவைக் கொடுப்பது மிகவும் முக்கியம். முதல் ஒரு வருடம் குழந்தையின் உடல் மற்றும் மூளை அதிவேகமாக வளர்வதால் இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். ஆனால், எல்லா வகையான உணவுகளும் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்காது. சில உணவுகள் குழந்தைகளின் செரிமான மண்டலத்தை பாதித்து பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகளைக் கொடுக்கக்கூடாது என்பதை அறிவது மிகவும் முக்கியம். இந்தப் பதிவில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய 6 முக்கிய உணவுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
தேன்: தேன் இயற்கையான ஒரு இனிப்பு உணவு என்றாலும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதைக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது. தேனில் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கும். இவை குழந்தைகளுக்கு ‘பாட்டலிசம்’ என்ற அரிதான நோயை ஏற்படுத்தும். இந்த நோய் குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம், தசை பலவீனம், உணவுக் குழாய் விரிவடைதல் போன்ற கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மீன் மற்றும் இறைச்சி: மீன் மற்றும் இறைச்சி போன்ற உணவுகளில் புரதம் நிறைந்திருக்கும். எனவே, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதைக் கொடுப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை. இவை குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தி நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.
முட்டை: முட்டையின் வெள்ளைக் கருவில் ஆல்பூமின் என்ற புரதம் உள்ளது. இது சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே, ஒரு வயது உட்பட்ட குழந்தைகளுக்கு முட்டை வெள்ளை கருவை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். முட்டை மஞ்சள் பகுதியில் புரதம் கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு குறைவான அளவில் கொடுப்பது நல்லது.
உப்பு மற்றும் சர்க்கரை: உப்பு மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகள் குழந்தைகளின் சிறுநீரகங்கள், இதயத்தை பாதிக்கும். இவை குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம், நீர்ச்சத்து இழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு தயாரிக்கும் உணவுகளில் உப்பு மற்றும் சர்க்கரை குறைவாகவே இருக்க வேண்டும்.
நட்ஸ்: பொதுவாகவே நட்ஸ் ஆரோக்கியமான உணவுதான் என்றாலும், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு இதைக் கொடுப்பது ஆபத்தானது. இவை குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும், சில சமயங்களில் குழந்தைகளின் மூச்சுக் குழாயில் அடைத்துக்கொள்ளும்.
பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள்: பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் நார்ச்சத்து நிறைந்தது. இவை செரிமான மண்டலத்தை பாதித்து வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, இவற்றை நன்கு வேகவைத்து மசித்து கொடுப்பது நல்லது.
குழந்தைகளுக்கு சரியான உணவுகளைக் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை நாம் உறுதி செய்ய முடியும். இருப்பினும், குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது நல்லது என்பது குறித்து, ஒவ்வொரு பெற்றோரும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.