உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரியாக கீழ் முதுகுப் பகுதியில் அமைந்துள்ள இந்த உறுப்புகள் உங்கள் ரத்தத்தில் இருந்து கழிவுப்பொருட்களை வடிகட்டுவதற்கும், திரவ சமநிலையை ஒழுங்குபடுத்தவருக்கும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும் பொறுப்பாகும். ஒருவேளை உங்களது கிட்னிகள் ஆபத்தில் இருக்கிறது என்றால் அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள்: உங்கள் சிறுநீர் கழிக்கும் முறையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் கவனமாக இருக்கவும். அதாவது, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் வெளியேறுவது குறைதல், சிறுநீர் வெளியேறும்போது நுரை, ரத்தம் அல்லது வேறு நிறத்தில் இருப்பது போன்ற அறிகுறிகள் இதில் அடங்கும்.
2. உடல் வீக்கம்: உங்கள் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது அதிகப்படியான திரவம் உங்கள் உடலில் குவிந்து கால்கள், பாதங்கள், முகம் அல்லது கைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இப்படி ஏற்படும் வீக்கங்களை சாதாரணமாக நினைத்து புறக்கணித்து விடாதீர்கள்.
3. சோர்வு மற்றும் பலவீனம்: சிறுநீரக பிரச்சனைகள் உங்கள் உடலில் நச்சுப் பொருட்களை தேங்க வைக்கும். இதன் காரணமாக போதுமான அளவு ஓய்வு எடுத்தாலும் அதிக சோர்வு, பலவீனம் மற்றும் ஆற்றல் இல்லாத உணர்வு ஏற்படும்.
4. சீரற்ற ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் உங்கள் சிறுநீரகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதிகப்படியான ரத்த அழுத்தம் அல்லது வழக்கத்திற்கும் குறைந்த இரத்த அழுத்த அளவீடுகள் திடீரென மாறிக்கொண்டே இருக்கும். இப்படி இருப்பது சிறுநீரகப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
5. தொடர் முதுகு வலி: சிறுநீரகம் தொடர்பான வலி பெரும்பாலும் விலா எலும்புக்கு கீழ் முதுகுப் பகுதியில் உணரப்படுகிறது. இந்த பகுதியில் நீங்கள் தொடர்ந்து அசௌகரியம் அல்லது வலியை அனுபவித்தால், உடனடியாக ஒரு சுகாதார நிபுணரை அணுகி பரிசோதிப்பது நல்லது.
6. பசியின்மை மற்றும் உடல் எடையில் மாற்றம்: சிறுநீரக செயலிழப்பு பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்திக்கு வழிவகுக்கும். அதேபோல திடீரென உடல் எடை குறைவது அல்லது அதிகரிப்பது உங்கள் சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகளாகவும் இருக்கலாம்.
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால், அல்லது உங்களுக்கு ஏதேனும் சிறுநீரகப் பிரச்சனை இருக்கலாம் என சந்தேகித்தால் உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெறுங்கள். சிறுநீரகப் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை அளித்து அவற்றின் செயல்பாட்டை மீட்டெடுப்பது எளிதாகும். எனவே இதுபோன்ற அறிகுறிகளில் சற்று கவனமாக இருங்கள்.