
நம் உடலுக்கு உருவத்தைக் கொடுத்து, அனைத்து இயக்கங்களுக்கும் அடித்தளமாயிருந்து, உள்ளுறுப்புகள் காயப்படாமல் பாதுகாத்து, பல வகையில் உடலுக்கு உறு துணையாய் இருப்பது எலும்புகளே! நம் வயது கூடும்போது எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்பு உருவாகும்.
நம் வாழ்வியல் முறையில், 6 எளிய பழக்கங்களை நாள் தவறாமல் பின்பற்றி வருவதன் மூலம், நம் வாழ்நாள் முடியும் வரை எலும்புகளின் ஆரோக்கியத்தை பழுதின்றி பாதுகாக்க முடியும். அந்த 6 பழக்கங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
1. கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்:
எலும்புகளை ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்க பால், தயிர், சீஸ் போன்ற அதிகளவு கால்சியம் நிறைந்த பொருட்களுடன், ஆல்மண்ட்ஸ், டோஃபு, பச்சை இலைக் காய்கறிகள் ஆகியவற்றையும் தினசரி உணவில் சேர்த்து உட்கொள்வது அவசியம். ஒரு நாளில் 1000-1200 மில்லி கிராம் கால்சியம் உடலில் சேருமாறு பார்த்துக் கொள்ளுதல் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உத்ர வாதம்.
2. வைட்டமின் D அளவு குறையாமல் பார்த்துக் கொள்ளுதல்:
தினசரி 10-15 நிமிடங்கள் உடலில் சூரியக் கதிர்கள் படுமாறு செய்தல், உடல் தனக்குத் தேவையான வைட்டமின் D சத்தை உற்பத்தி செய்துகொள்ள உதவும். கால்சியம் சத்தை உடலுக்குள் உறிஞ்சவும், கனிமச் சத்துக்களை எலும்புகளுக்குள் சேமிக்கவும் வைட்டமின் D அவசியம் தேவை. சூரியனே தென்படாத நாட்கள் மற்றும் குளிர் காலங்களில் வைட்டமின் D யின் தேவையைப் பூர்த்தி செய்ய கொழுப்பு அமிலம் நிறைந்த மீன், முட்டைகள் மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு வகைகளை உட்கொள்ளலாம்.
3. உடற்பயிற்சி செய்தல்:
டம்பெல்ஸ் மற்றும் தசைகளை வலிமையாக்கி உடல் அளவை அதிகரிக்க உதவும் ரெசிஸ்டன்ஸ் பேண்ட் பயிற்சிகள், எலும்புத் திண்மம் மேன்மையடையவும் உதவி புரியும். இதனால் எலும்புகளின் கட்டமைப்பு வலுவடையும். மேலும் எலும்புகள் சமநிலைத் தன்மையுடன் உடலின் இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றவும் முடியும்.
4. சரிவிகித உணவு உட்கொள்ளுதல்:
வைட்டமின் D மட்டுமின்றி, எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் K, மக்னீசியம், மற்றும் ப்ரோட்டீன் சத்துக்களும் தேவை. இவற்றை முழு தானிய வகை உணவுகள், நட்ஸ், பச்சை இலைக் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களிலிருந்து பெறலாம்.
5. புகையிலை மற்றும் மதுப்பழக்கம் தவிர்த்தல்:
சிகரெட் பிடித்தல் எலும்பின் அடர்த்தியை குறையச் செய்யும். ஆல்கஹால், கால்சியம் உடலுக்குள் உறிஞ்சப் படும் செயலில் தலையிட்டு தாமதம் உண்டாகச் செய்யும். இவ்விரண்டும் எலும்புகளை வலுவிழக்கச் செய்வதால் அவற்றைத் தவிர்ப்பது ஆரோக்கியம்.
6. போதுமான அளவு தரமான உறக்கம் பெறுதல்:
இரவில் நன்கு உறங்கி ஓய்வெடுப்பதும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சிறந்த முறையில் உதவி புரியும்.
தரமான உறக்கம் பெறாதபோது எலும்புகளின் அடர்த்தி குறையவும், ஹார்மோன் உற்பத்தியில் நிலையற்ற தன்மை உண்டாகவும் வழியாகும். இவை இரண்டும் பல வகையான உடல் நலக் குறைபாடுகளுக்கு காரணிகளாகும்.
மெடிடேசன், மூச்சுப்பயிற்சிகளை செய்து தினமும் 7 மணி நேர தூக்கத்தை வரவழைத்துக் கொள்வது உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்பட உதவும்.
மேற்கூறிய வழி முறைகளை நாமும் பின்பற்றுவோம். நலமுடன் வாழ்வோம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)