சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடைந்த எலும்புகள் மற்றும் எலும்பு துண்டுகளை மூன்றே நிமிடங்களில் சரிசெய்யக்கூடிய மருத்துவ எலும்பு பசை (Bone glue)யை உருவாக்கியுள்ளனர். எலும்பு முறிவுகளை சரிசெய்யவும், எலும்பியல் சாதனங்களை பொருத்துவதற்கும் ஒரு ஒட்டுபொருள் தேவைப்படுவது நீண்ட நாட்களாகவே ஒரு சவாலாக இருந்தது. ஆனால் இப்போது சீன விஞ்ஞானிகள் அதற்கான தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள ஒரு ஆராய்ச்சி குழுவினர் "போன் 02" (Bone 02) எலும்பு பசையை செப்டம்பர் 10 அன்று அறிமுகப்படுத்தினர்.
சர் ரன் ரன் ஷா மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், இந்த ஆராய்ச்சி குழுவின் தலைவருமான திரு லின் சியான்ஃபெங் (Lin Xianfeng) என்பவர், கடலுக்கு அடியில் உள்ள ஒரு பாலத்தில் சிப்பிகள் உறுதியாக ஒட்டிக்கொண்டிருப்பதை கண்ட பிறகு, இந்த எலும்பு பசையை உருவாக்க தனக்கு உத்வேகம் கிடைத்ததாக கூறினார்.
லின் கூறியபடி, இந்த பசையானது இரத்தம் நிறைந்த சூழலிலும் கூட, இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்குள் எலும்பை துல்லியமாக ஒட்டி உறுதிப்படுத்த முடியும். மேலும், எலும்புகள் குணமடையும் போது, இந்த பசை இயற்கையாகவே உடலால் உறிஞ்சப்பட்டுவிடும். இதனால் உள்வைப்புகளை அகற்ற மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இந்த சோதனைகளில் ஒன்றில், இந்த பசையை பயன்படுத்தி எலும்பை சரிசெய்ய 180 வினாடிகள் அல்லது மூன்று நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆனது. ஆனால் வழக்கமான சிகிச்சையானது, இரும்பு தகடுகள் மற்றும் திருகுகளைப் பொருத்துவதற்கு பெரிய அளவிலான கீறல்களை ஏற்படுத்த வேண்டியிருக்கும். சீன ஊடக தகவல்படி, இந்த எலும்பு பசை 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
பசையால் ஒட்டப்பட்ட எலும்புகள் 400 பவுண்டுகளுக்கும் அதிகமான அதிகபட்ச பிணைப்பு சக்தியையும், சுமார் 0.5 MPa வெட்டு வலிமையையும், 10 MPa சுருக்க வலிமையையும் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இது இந்த தயாரிப்பு பாரம்பரிய உலோக உள்வைப்புகளுக்கு மாற்றாக இருப்பதற்கு அதிக சாத்தியம் உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. மேலும், இது ஒவ்வாமை மற்றும் தொற்று ஏற்படும் அபாயங்களையும் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தற்போது, எலும்பு முறிவுகளை சரிசெய்ய சந்தையில் பல எலும்பு சிமென்ட்கள் மற்றும் எலும்பு நிரப்பிகள் உள்ளன. ஆனால் அவை எதுவும் ஒட்டும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. முதல் எலும்பு ஒட்டுபொருட்கள் 1940-களில் ஜெலட்டின், எபோக்சி பிசின் மற்றும் அக்ரிலேட்டுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டன. இருப்பினும், உயிரிகளுடன் ஒத்துப் போகாத தன்மை காரணமாக அவை பொருத்தமானதாக இல்லை என கைவிடப்பட்டன.