நம் உடலில் உள்ள தசைகளின் ஆரோக்கியத்தைக் காக்கவும் உடலுக்குத் தொடர்ந்து சக்தி அளிக்கவும் உதவுக்கூடிய ஆல்மன்ட் மாவு, கடலை மாவு, பக்வீட் மாவு, ஹெம்ப் சீட் மாவு, குயினோவா மாவு மற்றும் சோயா பீன் மாவு போன்றவற்றில் அதிகளவு புரோட்டீன் மற்றும் வேறு பல ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன. இந்த ஆறு வகை க்ளூட்டன் ஃபிரீ மாவுகளையும் ரொட்டி மற்றும் கூக்கீஸ் போன்ற உணவுகளின் தயாரிப்பில் சேர்த்து நம் தினசரி உணவுகளோடு உட்கொண்டு வந்தால் நமக்கு சரிவிகித உணவு கிடைப்பதுடன், நம் உடலின் ஆரோக்கியமும் மேன்மையடையும். இந்த மாவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய ஊட்டச் சத்துக்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஆல்மன்ட் மாவு: இரண்டு டேபிள் ஸ்பூன் ஆல்மன்ட் மாவில் சுமார் 6 கிராம் புரோட்டீன் சத்து உள்ளது. மேலும், இதில் நார்ச்சத்து, வைட்டமின் E மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளும் நிறைந்துள்ளன. இது சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த கூக்கீஸ், பான்கேக், பிரட், மஃபின் போன்ற உணவுகளின் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகிறது.
2. கடலை மாவு (Besan): இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவில் சுமார் 7 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் புரோட்டீன் தவிர மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்து போன்ற மினரல்களும் உள்ளன. இந்த மாவை ஸ்நாக்ஸ், ரொட்டி, இனிப்பு மற்றும் கறி வகைகள் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
3. பக்வீட் மாவு: இரண்டு டேபிள் ஸ்பூன் பக்வீட் மாவில் சுமார் 6 கிராம் புரோட்டீன் சத்து உள்ளது. இது கோதுமை வகையைச் சேர்ந்ததல்ல; க்ளூட்டன் ஃபிரீயானது. இதில் அதிகளவு புரோட்டீன் சத்துடன் ஒன்பது வகை அமினோ ஆசிட்களும் நிறைந்து ஒரு முழுமையுற்ற புரோட்டீன் உணவாக இதை மாற்றியுள்ளது. மேலும், அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் இந்த மாவில் உள்ளன. இது சுவையான ரொட்டி, இனிப்பு மற்றும் கார வகை ஸ்நாக்ஸ் தயாரிக்க உதவும்.
4. ஹெம்ப் சீட் மாவு: இரண்டு டேபிள் ஸ்பூன் ஹெம்ப் சீட் மாவில் சுமார் 10 கிராம் புரோட்டீன் சத்து உள்ளது. இதில் புரோட்டீன் சத்துடன், நார்ச்சத்து, ஒமேகா 3, ஒமேகா 6, கொழுப்பு அமிலங்களும் அதிகம் உள்ளன. இது நட்டி ஃபிளேவர் கொண்டது. இது ஸ்மூத்தி மற்றும் பேக்கரி உணவுகளின் தயாரிப்பில் சேர்க்கவும், யோகர்ட் மற்றும் ஓட் மீல் மீது டாப்பிங்காகப் பயன்படுத்தவும் உதவும்.
5. குயினோவா மாவு: இது ஒன்பது வகை அமினோ ஆசிட்களும் நிறைந்த ஒரு முழுமையுற்ற புரோட்டீன் உணவு. இதில் குர்செட்டின் (quercetin) மற்றும் கெம்ஃபெரால் (kaempferol) போன்ற தாவர வகை கூட்டுப் பொருள்கள் உள்ளன. இவை ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டவை. இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் இதய ஆரோக்கியம் காக்க உதவும். பிரட் மற்றும் பிரவ்னீ தயாரிக்க இந்த மாவு உபயோகப்படும்.
6. சோயா பீன் மாவு: அசைவ உணவுகளிலிருந்து கிடைப்பதை விட அதிகளவு புரோட்டீன் இதில் உள்ளது. இது தசைகளின் வளர்ச்சிக்கும் சிதைவுற்ற தசைகளை சீரமைக்கவும் உதவும். இதிலுள்ள நார்ச்சத்து சிறப்பான செரிமானத்துக்கும், மலச்சிக்கல் நீங்கவும் உதவும்; ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வீக்கங்களைக் குறைத்து நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்க உதவும்; கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுவாக்கும்.
மேற்கூறிய மாவு வகைகளை அடிக்கடி உட்கொண்டு ஆரோக்கியம் காப்போம்.