
மனிதர்கள் தினமும் போதுமான தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். அதிலும் வெந்நீர் (Hot water) குடிப்பதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும். பாரம்பரிய மருத்துவத்திலும் நவீன அறிவியல் பூர்வமான ஆய்வுகளிலும் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தினமும் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்
வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் 7 ஆரோக்கிய நன்மைகள்:
1. சிறந்த செரிமானம்:
நாம் உண்ணும் உணவு நன்றாக செரிமானம் ஆவது மிகவும் முக்கியம். உண்ட உணவை மிகவும் திறம்பட உடைக்க வெந்நீர் உதவுகிறது. அது செரிமானப் பாதையை மென்மையாக்கி செரிமானம் திறம்பட நடக்க உதவுகிறது. மேலும் குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தைத் தடுக்கிறது. குடல் தசைகளை தளர்த்துவதால் குடல் இயக்கம் எளிதாகின்றது.
2. நச்சு நீக்கம்:
வெந்நீரை தினமும் அருந்தி வருவதால் அது சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. உடலில் உள்ள கழிவுகளும் நச்சுக்களும் முறையாக நீக்கப்படுகின்றன. சிறுநீர் மூலம் கழிவுகள் மற்றும் அசுத்தங்கள் சிறப்பாக அகற்றப்படுகின்றன. மேலும் வெந்நீர் குடிக்கும் போது அது உடலில் வியர்வையை அதிகமாக்கி, இயற்கையான நச்சு நீக்கியாக செயல்பட்டு தோல் பளபளப்பாக இருக்க உதவுகிறது.
3. மூக்கடைப்பை நீக்குகிறது:
சூடான நீரில் இருந்து வரும் நீராவி சளியைத் தளர்த்தவும் மூக்கடைப்பை நீக்கவும் உதவுகிறது. சளி அல்லது சைனஸ் தொந்தரவின் போது மூக்கு அடைபட்டு இருந்தாலும், தொண்டைக்கட்டு மற்றும் புண் ஆகியவற்றிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்க உதவுகிறது.
4. ரத்த ஓட்டம் மேம்படுதல்:
வெந்நீர் அருந்தி வரும்போது அது உடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவு படுத்துகிறது. உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை திறம்பட கிடைக்க உதவுகிறது. இதய நோய் வரும் அபாயத்தையும் குறைக்கிறது. இதய நோயாளிகளுக்கு வெந்நீர் குடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. அசைவ உணவுகள், எண்ணெய்ப் பலகாரம் சாப்பிட்ட பின்னர் வெந்நீர் குடித்தால் அது ரத்தத்தை முறையாக சுத்திகரிக்கிறது.
5. எடை இழப்பு:
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு உகந்தது வெந்நீர். சூடாக நீர் அருந்தும் போது அது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது. கலோரிகளை விரைவாக எரிக்க உதவுகிறது. உணவு எடுத்துக் கொள்ளும் முன்பாக ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கும் போது அது வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. தேவையில்லாமல் அதிகமாக சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துகிறது. பசியைக் கட்டுப்படுத்துவதால் தேவையில்லாத ஸ்னாக்ஸ், பலகாரங்கள் சாப்பிடத் தோன்றாது. இதனால் உடல் எடை மிகவும் கட்டுக்குள் இருக்கும்.
6. மன அழுத்தம் குறைதல்:
சூடான நீரில் இருந்து வரும் வெப்பம் நரம்பு மண்டலத்தில் ஒரு அமைதியான விளைவைத் தருகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. பதட்டத்தையும் தடுக்கிறது. உடலையும், மனதையும் நிதானமாக செயல்பட உதவுகிறது. இதனால் ஒட்டுமொத்த நல்வாழ்வும் மேம்படுத்தப்படுகிறது.
7. மாதவிடாய் வலியைக் குறைக்கிறது:
சில பெண்களுக்கு மாதம் தோறும் வரும் மாதவிடாயின் போது வயிற்று வலி ஏற்படும். வெந்நீர் குடிப்பதனால் வயிற்றுத் தசைகள் மற்றும் ரத்த நாளங்களைத் தளர்த்த உதவுகிறது. இயற்கையான மாதவிடாய்ப் பிடிப்புகள் மற்றும் தசை வலியை நீக்குகிறது. பொதுவான உடல் வலிகளையும் தணிக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.
வெந்நீர் எப்போது குடிக்க வேண்டும்?
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன்பும் உணவுக்கு அரைமணி நேரத்திற்கு முன்பும் வெந்நீர் அருந்தலாம். உடலில் கடுமையான பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின்னர் வெந்நீர் குடிக்கலாம்.