இந்தோனேஷியாவை பூர்வீகமாகக் கொண்ட Myristica Fragrans என்ற மரத்திலிருந்து வந்த ஜாதிக்காய் ஒரு மசாலா பொருள் ஆகும். ஜாதிக்காய் உணவிற்கு சுவையை கூட்டுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியப் பண்புகள் அதிகம் நிறைந்ததாகும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு தினமும் ஜாதிக்காய் தண்ணீர் குடித்து வந்தால் உடலுக்கு நம்ப முடியாத பல நன்மைகள் கிடைக்கும்.
1. நல்ல தூக்கம்: ஜாதிக்காயில் இருக்கும் பண்புகள் உடலை தளர்த்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் பெரிதும் உதவுவதால் நல்ல தூக்கம் கிடைக்கும். தூக்கமின்மை பிரச்னை இருந்தால், இரவு தூங்கும் முன்பு ஒரு கிளாஸ் ஜாதிக்காய் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் நரம்பு மண்டலம் அமைதியாகி, இரவு நிம்மதியாக தூங்குவீர்கள்.
2. சிறந்த செரிமானம்: ஜாதிக்காய் தண்ணீர் வயிற்று ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஏனெனில், இதில் இருக்கும் பண்புகள் செரிமான அமைப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அமிலத்தன்மை, மலச்சிக்கல், வாயு போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுவதால், தினமும் இரவு தூங்கும் முன்பு ஒரு கிளாஸ் ஜாதிக்காய் தண்ணீர் குடித்து வந்தால் காலையில் உங்களது வயிற்றை சுத்தமாக்க உதவுகிறது.
3. நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்: ஜாதிக்காயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும் என்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவகாலத் தொற்று நோய்களை தவிர்க்க தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு கிளாஸ் ஜாதிக்காய் தண்ணீரை குடியுங்கள்.
4. சரும ஆரோக்கியத்திற்கு: ஜாதிக்காய் நீரானது சருமத்தை உள்ளே இருந்து ஊட்டமளிக்க உதவுகிறது மற்றும் அதை சுத்தப்படுத்தவும் செய்கிறது. எனவே, இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உங்களது சருமம் பளபளப்பாக மாறுவது மட்டுமின்றி, முகப்பரு பிரச்னைகள் ஏற்படுவது குறையும்.
5. எடையை குறைக்க உதவும்: ஜாதிக்காய் நீரில் இருக்கும் பண்புகள் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுவதோடு, இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, எடையை குறைக்க விரும்புபவர்கள் இரவு தூங்கும் முன்பு ஒரு கிளாஸ் ஜாதிக்காய் நீர் குடித்து வாருங்கள்.
6. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: ஜாதிக்காயில் இருக்கும் பண்புகள் இரத்தத்தை சுத்தப்படுத்த முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, அந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். முக்கியமாக, இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
7. மன அழுத்தம் & பதற்றம் குறையும்: ஜாதிக்காய் மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. எனவே, அடிக்கடி மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்பட்டால் இரவு தூங்கும் முன்பு ஜாதிக்காய் நீரை தொடர்ந்து குடித்து வந்தால் அதிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.
ஜாதிக்காய் நீர் செய்முறை:
தேவையான பொருட்கள்: ஜாதிக்காய் தூள் - கால் ஸ்பூன், தண்ணீர் - 1 கிளாஸ், தேன் அல்லது எலுமிச்சை சாறு - தேவைப்பட்டால்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் ஜாதிக்காய் பொடியை சேர்த்து கலக்கி சிறிது நேரம் அப்படியே ஆற வைக்கவும். பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி தேவைப்பட்டால் அதில் சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகலாம்.