சில நேரங்களில் நாம் உட்கொள்ளும் உணவு சரியான முறையில் சமைக்கப்படாவிட்டாலோ அல்லது சமைக்கும் முன் உணவுப் பொருட்களை நன்கு கழுவி சுத்தப்படுத்தாவிட்டாலோ அவற்றில் உள்ள அசுத்தங்கள் மற்றும் நோய்க் கிருமிகள் வயிற்றுக்குள் சென்று அவை, அந்த உணவை விஷத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும். அப்போது ஒவ்வாமை, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். நம் வயிறு சிரமப்பட்டு அந்த விஷத்தன்மை கொண்ட உணவை வாந்தி அல்லது பேதி மூலம் வெளியேற்றிவிடும். குடல் இயக்கங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர நாம் உட்கொள்ள வேண்டிய 7 உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. தண்ணீர்: ஃபுட் பாய்சன் வயிற்றுக்குள் பாதிப்பை உண்டுபண்ண ஆரம்பித்ததும் வயிறு அந்த உணவை முழுவதுமாக வெளியில் தள்ள முனையும். அந்த செயலில் உடல் முழுவதிலிருந்தும் திரவத்தை உள்ளிழுத்து உணவை அதனுடன் சேர்த்து வாந்தி அல்லது பேதியாக வெளியேற்றும். இதனால் டீஹைட்ரேஷன் ஆகும் வாய்ப்பு உண்டாகும். எனவே, அச்சமயங்களில் அதிகளவு நீர் அருந்துவது மிகவும் அவசியம்.
2. சூப்: வயிறு மீண்டும் உணவுகளை ஏற்றுக்கொள்ள, முதலில் கிளீயர் வெஜிடபிள் சூப் அல்லது ஓரல் ரீஹைட்ரேஷன் சொலூஷன் (ORS) உட்கொள்ளலாம்.
3. தயிர்: தயிரில் நிறைந்துள்ள புரோபயோட்டிக்ஸ் வயிற்றில் உள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகளின் அளவை மீண்டும் சம நிலைக்குக் கொண்டு வர உதவும். இதனால் செரிமான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
4. வேக வைத்த காய்கறிகள்: இவை உடலுக்கு ஏற்பட்ட வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் இழப்பை மீண்டும் இட்டு நிரப்பவும் சுலபமான செரிமானத்துக்கும் உதவி புரியும்.
5. ஃபிரஷ் ஃபுரூட்ஸ்: ஃபிரஷ் மற்றும் சீசனல் பழ வகைகளை உண்பதால் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கும். மேலும் ஜீரணமாவதில் எந்தக் கோளாறும் உண்டாகாது.
6. BRAT டயட்: பனானா, ரைஸ், ஆப்பிள் சாஸ் மற்றும் பிரட் டோஸ்ட் அடங்கிய உணவு இது. ஃபுட் பாய்சனால் பாதிப்பு அடைந்தவர்கள் உண்பதற்கு ஏற்றவை இவை.
7. வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு: இதிலுள்ள ஸ்டார்ச் சத்து சுலபமாக ஜீரணமாகக் கூடியது. மேலும் இதை ஏற்கெனவே மசித்து விடுவதால் இதிலுள்ள நார்ச் சத்துக்கள் நன்கு உடைக்கப்பட்டு ஜீரணம் மேலும் சுலபமாகிவிடும்.
ஃபுட் பாய்சனால் பாதிப்படைந்தவர்கள் உடனடியாக பழைய நிலைக்குத் திரும்ப எண்ணி, பொரித்த, வறுத்த, காரசாரமான உணவுகளை உட் கொள்ள நினைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதில், மேலே ஏற்கெனவே நாம் பட்டியலிட்ட உணவுகளை உட்கொண்டு, குடல் ஆரோக்கியத்தை படிப்படியாக பழைய நிலைக்குக் கொண்டு வருவதே சரியான தீர்வாகும்.