நாம் உண்ணும் உணவுதான் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு வாய் உணவிற்கும் பின்னால், நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் பாதிக்கும் ஒரு சங்கிலித் தொடர் தொடங்குகிறது. ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கையின் அடிப்படை. ஆனால், சில உணவுகள் நம் உடலுக்கு நச்சுப் பொருள்களை சேர்த்து, பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். அவை என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உடல் நிலையைக் கெடுக்கும் 7 உணவுகள்:
அதிகப்படியான சர்க்கரை: அதிக சர்க்கரை நிறைந்த பானங்கள், இனிப்புகள், பேக்கரி பொருட்கள் போன்றவை உடல் எடையை அதிகரித்து நீரிழிவு, இதய நோய், பல் சேதம் போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகும். சர்க்கரை, உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, கொழுப்பு செல்களை உருவாக்கி உடல் எடையை அதிகரிக்க செய்யும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பிஸ்கட், ரெடிமேட் உணவுகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக அளவு சோடியம், கொழுப்பு மற்றும் ரசாயனக் கலவைகளைக் கொண்டிருக்கும். இவை உயர் ரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
வெள்ளை மாவு: வெள்ளை அரிசி, வெள்ளை மாவு போன்றவற்றில் நார்ச்சத்து குறைவாகவும், கிளைசெமி குறியீடு அதிகமாகவும் இருக்கும். இவை ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரித்து, உடலுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
டிரான்ஸ் கொழுப்பு: பிரியாணி, வெண்ணெய், பேக்கரி பொருட்கள் போன்றவற்றில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்பு புற்றுநோய், இதய நோய் போன்ற நோய்களுக்குக் காரணமாகிறது. இது நல்ல கொழுப்பின் அளவைக் குறைத்து, கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்வதால், ரத்த நாளங்கள் அடைத்துக் கொண்டு, மாரடைப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகள்: சோடா, மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றில் காணப்படும் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகள், உடல் செயல்பாடு குறைதல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, இத்தகைய ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிகப்படியான டீ, காபி: அதிகப்படியான டீ, காபி அருந்துவதால் தூக்கமின்மை, பதட்டம், அதிக இதயத்துடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால், உடல்நிலை மோசமாகும் வாய்ப்புள்ளது.
அதிகப்படியான மது: அதிகப்படியான மது அருந்துவதால் கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய், இதய நோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக, மது அருந்துவது நேரடியாக கல்லீரலை பாதிப்பதால், விரைவில் நீங்கள் பரலோகம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
எனவே, நாம் உண்ணும் உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து, என்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை கடைப்பிடியுங்கள். மேலே, குறிப்பிட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், அவற்றின் அளவைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான மாற்று உணவுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.