காபியுடன் மருத்துவ குணமுடைய மஷ்ரூமின் சாற்றை எடுத்துக் கலந்து தயாரிக்கப்படும் காபியே மஷ்ரூம் காபி எனப்படுகிறது. இதிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகளுக்காகவே சமீப காலமாக இந்த காபி அதிகளவில் பிரபலமடைந்து வருகிறது. மஷ்ரூம் காபியிலிருந்து கிடைக்கும் நன்மைகள் என்னென்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரெய்ஷி (Reishi) மற்றும் ச்சாகா (Chaga) போன்ற காளான்கள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டவை. மஷ்ரூம் காபியை தொடர்ந்து குடித்து வந்தால் உடலிலுள்ள வீக்கங்கள் குறைந்து உடலின் மொத்த ஆரோக்கியமும் மேன்மையடையும். அதன் மூலம் நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயமும் தடுக்கப்படும். ரெய்ஷி, ச்சாகா மற்றும் டர்க்கி டெயில் (Turkey Tail) போன்ற மஷ்ரூம்களில் நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் குணம் உள்ளது. இவற்றிலுள்ள பீட்டா குளுகான்ஸ் மற்றும் வேறு பல கூட்டுப்பொருட்களும் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும், நோய்களைக் குணமாக்கவும் உதவி புரிகின்றன.
மஷ்ரூம் காபி கலவையுடன் சேர்க்கப்படும் கார்டிஸெப்ஸ் (Cordyceps) என்ற பொருளானது உடல் சக்தியின் அளவை அதிகரிக்கச் செய்து சோர்வை விரட்டக்கூடிய வல்லமை கொண்டது. நம் தசைகளுக்கு சக்தியளித்து சகிப்புத்தன்மையை அதிகரிக்கச் செய்ய, 'ATP' (Adenosine Triphosphate) என்ற பொருளை நம் உடல் உற்பத்தி செய்கிறது. 'ATP' உற்பத்தியின் அளவை அதிகரிக்கச் செய்வதற்கு நம் உடலுக்கு பெரிதும் உதவி புரிவது கார்டிஸெப்ஸ்.
‘அழியாத்தன்மை கொண்ட மஷ்ரூம்’ என அழைக்கப்படுவது ரெய்ஷி மஷ்ரூம். இது அடாப்டோஜெனிக் குணம் கொண்டது. இது உடலுக்குள் உண்டாகும் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்கொண்டு அழிக்கவும் உடலை சோர்வடையாமல் தளர்வுடன் வைத்திருக்கவும் உதவும். இந்த காபியை தொடர்ந்து அருந்துவதால் கவலைகள் மறைந்து மகிழ்ச்சியான மனநிலை உருவாகும்.
ச்சாகா மஷ்ரூமில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை தீங்கு செய்யும் ஃபிரி ரேடிகல்களால் உண்டாகும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கவும், செல்களில் உண்டாகும் சிதைவுகளைத் தடுக்கவும் உதவுகின்றன. இதனால் பல வகை நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகாமல் உடலின் மொத்த ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது; வாழ்நாளும் நீட்டிக்கப்படுகிறது.
சில வகை மருத்துவ குணம் கொண்ட மஷ்ரூம்களில் பிரிபயோடிக்ஸ் அடங்கியுள்ளன. இவை ஜீரண மண்டல உறுப்புகளில் வளரும் நல்ல பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாய் வளர உதவுகின்றன. இந்த நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் சிறப்பான செரிமானத்துக்கும், நோயெதிர்ப்புச் சக்தியை வலுவடையச் செய்யவும் உதவுகிறது. சாதாரண காபியில் இருப்பதை விட மஷ்ரூம் காபியில் காஃபின் அளவு குறைவாக உள்ளது. காஃபின் அளவை குறைத்து உட்கொள்ள விரும்பும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். அதிகளவு காஃபின் பாதிப்பு இல்லாமல் காபி குடித்த திருப்தி கிடைக்கும். மஷ்ரூம் காபியை நாமும் அருந்துவோம்; நலம் பல பெறுவோம்!