நமது வாழ்க்கையை சுறுசுறுப்பாகவும் வளமாகவும் எடுத்துச் செல்ல நமக்கு அடித்தளமாக அமைவது நமது இரண்டு கால்கள் மட்டுமே. அவை ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருப்பது மிகவும் அவசியம். கால் தசைகளில் பிடிப்பு ஏற்படாமல் பாதுகாக்க குறிப்பிட்ட ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சில வகை உணவுகளை உட்கொண்டு கால்களை வலுவுடன் வைத்துக் கொள்வதும் நமது கடமையாகிறது. அதற்கு நாம் உட்கொள்ள வேண்டிய 7 வகை சூப்பர் உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பசலைக் கீரை: பசலைக் கீரையில் அதிகளவு இரும்புச் சத்தும் கால்சியமும் உள்ளன. இவை இரண்டும் எலும்புகளையும் தசைகளையும் வலுவாக்க சிறந்த முறையில் உதவக் கூடியவை. எனவே, நம் கால்கள் இரண்டும் வலுப்பெற இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலனைத் தரும்.
2. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை சிதைவுற்ற தசைகளை சீரமைக்கவும் எலும்புகளை ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்கவும், கால்களை வலுவடையச் செய்யவும் உதவும்.
3. பாதாம் பருப்புகள்: ஒரு கைப்பிடி பாதாம் பருப்புகள் தசைகள் நல்ல முறையில் செயல்படத் தேவையான மக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புச் சத்துக்களைத் தரக்கூடியவை. பாதாம் பருப்புகளை இரவில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலையில் தோலை உரித்துவிட்டு வெறும் வயிற்றில் உட்கொண்டால் முழு பயனையும் பெறலாம்.
4. குயினோவா: புரோட்டீன் சத்து அதிகம் நிறைந்துள்ள குயினோவா தானியம், தசைகள் ஆரோக்கியத்துடன் திகழவும் கால்கள் சிறந்த முறையில் செயல் புரியவும் உதவும்.
5. க்ரீக் யோகர்ட்: அதிகளவு புரோட்டீன் மற்றும் கால்சியம் சத்துக்கள் கொண்டது க்ரீக் யோகர்ட். இது கால் தசைகள் சீராக வளர்ச்சியடையவும் சிறப்பான கட்டமைப்பு பெறவும் உதவும். மேலும், கால் எலும்புகள் உச்சபட்ச ஆரோக்கியம் பெற்று தொடர்ந்து செயல்பட உதவி புரியும்.
6. புரோக்கோலி: புரோக்கோலியில் அதிகளவு கால்சியம் மற்றும் வைட்டமின் K சத்துக்கள் உள்ளன. இவை எலும்புகளுக்கு உள்ளிருக்கும் மஜ்ஜை (Bone marrow)யை சமநிலையில் வைக்கவும், கால்களை வலுவாக வைத்துப் பராமரிக்கவும் உதவி புரியும்.
7. ஸ்வீட் பொட்டட்டோ: ஸ்வீட் பொட்டட்டோவில் உள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள், உடற்பயிற்சி செய்யும்போது கால்களுக்கு தொடர்ந்து சக்தி அளிக்கவும், தசைகளில் பிடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவும்.
மேலே கூறிய இந்த ஏழு வகை உணவுகளையும் நாம் அடிக்கடி உணவில் சேர்த்து உட்கொண்டு வலுவான கால்களைப் பெற்று வளமோடு வாழ்வோம்.