
ஆரோக்கியமான வாழ்விற்கு ஆழ்ந்த உறக்கம் இன்றியமையாதது. பலருக்கும் இது எட்டாக் கனியாகவே உள்ளது. படுத்தவுடன் தூங்கவும், பல மணி நேரம் இடையூறின்றி உறக்கம் பெறவும் உதவக்கூடிய ஏழு பொருட்கள் நம் சமையல் அறையிலேயே உள்ளன. அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.ஆல்மண்ட்ஸ்:
இதிலுள்ள மக்னீசியம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், உடனடி தூக்கம் பெற உதவும் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவும் உதவும். படுக்கைக்குச் செல்லும் முன் 10-15 ஆல்மன்ட்ஸ் சாப்பிடுவது தசைகளை தளர்வுறச் செய்து அமைதியான உறக்கம் பெற உதவும்.
2.அரிசி சாதம்: இதிலுள்ள கார்போஹைட்ரேட்ஸ், ட்ரைப்ட்டோஃபேன் (tryptophan) என்னும் அமினோ ஆசிட்டின் உற்பத்திக்கு உதவும். இந்த ஆசிட்டிலிருந்து உருவாகும் மெலடோனின் மற்றும் செரோட்டோனின் என்ற ஹார்மோன்கள் உடல் அயற்சி நீக்கி அமைதியான உறக்கம் பெற உதவும். படுக்கைக்குச் செல்வதற்கு சில மணி நேரத்திற்கு முன் அரிசி உணவை எடுத்துக்கொள்வது நலம்.
3.சூடான பால்: சூடான பால், உடல் இயற்கை முறையில் மெலடோனின் மற்றும் செரோட்டோனின் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவி புரியும். பால்பொருள் ஒவ்வாமை உள்ளவர்கள் ஓட்ஸ் மில்க் அல்லது ஆல்மன்ட் மில்க் எடுத்துக் கொள்ளலாம்.
4.கிவி பழம்: ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மிக அதிகம் நிறைந்த பழம் கிவி. உடலில், உறக்கம்-விழிப்புணர்வு சுழற்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் செரோட்டோனின் என்ற ஹார்மோனும் இப்பழத்தில் உள்ளது. இதிலுள்ள வைட்டமின் C ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கவும் உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும். ஒன்று அல்லது இரண்டு கிவி பழத்தை, படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உண்பது சுலபமாக தூக்கம் பெற உதவும்.
5.கொழுப்பு நிறைந்த மீன் வகைகள்: சால்மன், மக்கரேல் மற்றும் சர்டைன் போன்ற மீன் வகைகளில் வைட்டமின் D மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை செரோட்டோனின் அளவை ஒழுங்கு படுத்தி தூக்கம் வரவழைக்கவும், மெலடோனின் உற்பத்தி அளவைப் பெருக்கவும் உதவும். டின்னருக்கு இந்த மீன் வகைகளை உட்கொள்வது தூக்கம் வரவழைக்கவும், மூளை மற்றும் இதய ஆரோக்கியம் காக்கவும் உதவும்.
6.செர்ரி பழம்: ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்த பழம். உடலில் ஸ்ட்ரெஸ்ஸையும் வீக்கங்களையும் குறைக்க உதவும். இயற்கை முறையில் மெலடோனின் அளவை சம நிலைப் படுத்தி தூக்கத்தை வரவழைக்கும் குணம் கொண்டது இப்பழம். படுக்கச் செல்லும் முன் ஒரு கைப்பிடி அளவு செர்ரி பழங்கள் சாப்பிட்டுவிட்டு படுத்தால் உடல் தளர்வுற்று உறக்கம் உடனே வரும்.
7.கெமோமைல் டீ (Chamomile Tea): இந்த மூலிகை டீ கவலைகள் மறந்து உடல் ரிலாக்ஸாகி அமைதி பெற உதவும். பரபரப்பான சூழலில் நாளைக் கழித்த பின் உடலை அமைதியுற ஆணையிடும் டீ இது. படுக்கைக்குப் போகும் முன் ஒரு கப் கெமோமைல் டீ அருந்துதல் ஆரோக்கியமான உறக்கத்திற்கு அஸ்திவாரம்.