நம் உடல் பருமன் குறையவும் எடையை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும், பகீரதப் பிரயத்தனம் செய்து நடைப்பயிற்சி, ஸ்கிப்பிங், ஸ்விம்மிங் என பலவித உடற்பயிற்சிகளை செய்வதுடன் ஜிம்முக்கு சென்று பயிற்சியாளர் மேற்பார்வையில் நவீன உபகரணங்களை உபயோகித்து மேலும் பல வகையான உடற்பயிற்சிகளையும் செய்து வருகிறோம். ஆனால், வீட்டிலிருந்தபடியே உடல் எடையை குறைக்கவும் வழியுண்டு. அதற்கான 7 டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
* புரோட்டீன் சத்து அதிகமுள்ள உணவை கூடுதலாக உட்கொண்டால் மெட்டபாலிஸ ரேட் அதிகரிக்கும். இதனால் நீண்ட நேரம் பசியுணர்வின்றி வயிறு நிரம்பிய மாதிரி இருக்கும்.
* இனிப்பு வகைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள் ஆகியவற்றை குறைந்த அளவில் உண்பதால், உட்கொள்ளும் கலோரி அளவு குறையும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதும் தடுக்கப்படும்.
* உணவு உண்பதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் உட்கொள்ளும் உணவின் அளவு குறையும். மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறும்.
* நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பதும் நீண்ட நேரம் பசியுணர்வின்றி வயிறு நிரம்பிய உணர்வை தொடரச் செய்யும். இதனால் அந்த நாளில் உட்கொள்ளும் மொத்த கலோரி அளவு கணிசமாகக் குறையும்.
* பதப்படுத்தப்படாத முழு தானியங்களை உபயோகித்து தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதில் உறுதியாய் இருங்கள். இதனால் மறைமுகமாக இனிப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு தவிர்க்கப்படும். உட்கொள்ளும் கலோரி அளவும் குறையும்.
* உண்ணும் உணவை சிறிய சைஸ் தட்டில் வைத்து கவனம் சிதறாமல் திருப்தியுடன் உண்டு முடிப்பதில் அளவுக்கு அதிகமாக உண்பது தவிர்க்கப்படும். ஆரோக்கியமும் மேம்படும்.
* ஆல்கஹாலில் கலோரி அளவு அதிகம் உள்ளது. அதை உட்கொள்ளும்போது பசி உணர்வு அதிகரித்து, அளவுக்கு அதிகமாக உணவு உண்ணும் நிர்ப்பந்தம் உண்டாகும். மேலும், கொழுப்பு எரிக்கப்படும் செயல் தடைபடும். எனவே, ஆல்கஹால் அருந்துவதை அறவே தவிர்ப்பது நல்லது.
உடல் எடை குறைய மேற்கண்ட டிப்ஸ்களைப் பின்பற்றித்தான் பார்ப்போமே.