கோடை காலத்தில் மற்ற சமயங்களை விட கண் நோய்கள் அதிகமாக பரவக் கூடும். மெட்ராஸ் ஐ மற்றும் அலர்ஜி காரணமாக கண்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படும். இது எதனால் ஏற்படுகிறது? எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்? வராமல் தடுக்க என்ன செய்யலாம்? என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.
வெயில் காலத்தில் பெரும்பாலும் நாம் சரும பராமரிப்பில் தான் அதிக கவனம் செலுத்துவோம். ஆனால் கண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதனை முறையாக பராமரிப்பதும் அவசியம். Madras Eye எனப்படும் கண் வலி, கண் சிவத்தல், கண்களில் அரிப்பு, எரிச்சல், வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுவதுடன் கண்களில் இருந்து நீர் வடியும். இவை அதிகமான வெப்பத்தாலும், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு காரணமாகவும், பூக்களிலிருந்து வெளிப்படும் மகர்ந்த துகள்கள் காற்றில் கலந்து கண்களுக்குள் விழுவது போன்ற காரணங்களாலும் அலர்ஜி ஏற்பட்டு உண்டாகும். பாக்டீரியாவால் வரும் இப் பிரச்சனைக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கண்களில் ஆன்டிபயாட்டிக் டிராப்ஸ் விடலாம்.
இப்படி கண் நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.
கண் வலி, காற்று மூலமாக பரவும் நோயல்ல. ஒருவருக்கு கண் வலி வரும் போது அவர் தன்னுடைய கண்களை தொட்டுவிட்டு வேறு ஏதேனும் பொருளைத் தொடும்போது அந்த பொருளில் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்ளும். அதனை மற்றொருவர் தொட்டு தன்னுடைய கண்களில் கையை வைப்பதன் மூலம் பரவும். இப்படித்தான் கண்வலி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. சானிடைசர்களை கை கழுவ பயன்படுத்துவதன் மூலம் பரவாமல் தடுக்கலாம்.
கண்ணாடி அணிவதன் மூலம் கண்களை தொடுவதை தவிர்க்கலாம்.கோடை காலத்தில் வெயிலில் வெளியே செல்ல நேரிடும் போது கண்களுக்கு கட்டாயம் சன் கிளாஸ் அணிய வேண்டும். ஏனெனில் கண்புரை, விழித்திரையில் பார்வை இழப்பு ஏற்படுவதற்கு சூரிய கதிரில் வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் காரணமாகலாம்.
கண்கள் ஆரோக்கியமாக இருக்க உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இருப்பது அவசியம். எனவே நீர் மற்றும் இயற்கை பானங்களை நிறைய அருந்துவது மிகவும் அவசியம்.
கண் வறட்சி மற்றும் கண் எரிச்சலுக்கு கண் மருத்துவரை கலந்தாலோசித்து உங்களுக்கு ஏற்ற கண் சொட்டு மருந்தை பயன்படுத்த, அவை கண்களை லூப்ரிகேட் செய்து வலி மற்றும் வறட்சியை போக்கும். அத்துடன் கண்கள் உலர்ந்து போவதை தடுக்க போதுமான அளவு நீர் பருவது அவசியம்.
அவசியமின்றி உச்சி வெயிலில் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. அப்படியே போக வேண்டும் என்றாலும் தலைக்கு தொப்பி அல்லது குடை எடுத்துக் கொள்வதுடன் காட்டன் உடைகளை அணிந்து செல்வது நல்லது.
கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், கண் நோய்கள் வராமல் இருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ளலாம். வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்ளுதலும், எண்ணெயில் பொரித்த பண்டங்களை ஒதுக்குவதும், குளிர்ச்சியான பொருட்கள் சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.
மஞ்சள், ஆரஞ்சு வண்ணங்களில் காணப்படும் பப்பாளி, கேரட் , மாம்பழம் போன்ற காய்களையும் பழங்களையும் எடுத்துக் கொள்வது கண்களுக்கு நல்லது. அதிலிருக்கும் பீட்டா கரோடின் கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.