
'மூளை' என்பது நம்முடைய அறிவாற்றலையும், நினைவாற்றலையும் சேமித்து வைக்கக்கூடிய இடமாகும். மூளை ஆரோக்கியமாக செயல்பட்டால் தான் நாம் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்கும் சில பழக்கங்கள் நம் மூளையை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. அந்த பழக்கங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. தற்போது உள்ள காலக்கட்டத்தில் நிறைய மக்கள் காலை உணவை தவிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், காலை உணவு எடுத்துக்கொண்டால் தான் மூளைக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து மூளை நன்றாக செயல்பட முடியும். காலை உணவை தவிப்பதால், மூளையின் செயல்திறன் வெகுவாக பாதிக்கும்.
2. போன் பேசுவதற்கு, பாட்டு கேட்பதற்கு என்று எந்நேரமும் ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு அதிக சத்தத்துடன் கேட்பது செவித்திறனை பாதிப்பது மட்டுமில்லாமல் நினைவாற்றலையும் பாதிக்கும்.
3. இரவு வெகுநேரம் விழித்திருப்பது தூக்கமின்மைக்கு ஒரு முக்கிய காரணமாகும். தூக்கமின்மை மூளையின் நினைவாற்றலையும், கற்றல் செயல்முறையையும் பாதிக்கும்.
4. கணினி, மொபைல் போன்ற பொருட்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இடைவேளை இல்லாமல் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் இருந்து வரக்கூடிய நீலநிற வெளிச்சமானது கண்களை, சருமத்தை பாதிப்பது மட்டுமில்லாமல் மூளைக்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
5. தொடர்ந்து இடைவேளை இல்லாமல் வேலை செய்வதும், மூளைக்கு அதிகமாக வேலை தருவதும் மூளையின் செயல்திறனை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
6. இருட்டில் வெகுநேரம் இருக்கும் பழக்கம் இருப்பது மூளைக்கு நல்லதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நம்முடைய மூளைக்கு இயற்கையான சூரிய ஒளி என்பது மிகவும் அவசியமாகும். இதனால் தான் மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது. இருட்டில் வெகுநேரம் இருப்பது டிப்ரெஷனை உண்டாக்குவது மட்டுமில்லாமல் மூளை செயல்பாட்டையும் குறைந்துவிடும்.
7. அதிகமாக Junk food என்று சொல்லப்படும் பீட்சா, பர்கர், பிரைஸ், சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் வெகுவாக குறைகிறது. அதற்கு பதில் ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள், Nuts போன்றவற்றை சாப்பிடும் போது மூளை நன்றாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது.
8. தனிமையில் இருப்பவர்களுக்கு மூளையின் செயல்பாடு குறையும் என்று சொல்லப்படுகிறது. நண்பர்களுடன் பேசும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உணர்வது மட்டுமில்லாமல் செயல்திறனும் அதிகரிக்கிறது. எனவே, நண்பர்களுடன் சேர்த்து டென்னீஸ், நடனம் போன்ற பொழுதுபோக்கான விஷயங்களை செய்யும் போது மூளை நன்றாக செயல்படும். இந்த 8 பழக்கங்களை மாற்றிக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட்டு மகிழ்ச்சியாக வாழலாம்.