
நாம் வெளிநாட்டிற்கு விமானப் பயணம் மேற்கொள்ளும்போது, விமானத்திற்குள் செல்வதற்கு முன், இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள 8 வகையான உணவுகள் உண்பதை தவிர்ப்பது நல்லது. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
1. புரோக்கொல்லி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக் கோஸ் போன்ற பச்சை இலைக் காய்கறிகளை உண்பதை தவிர்ப்பது நலம். இவை வயிற்றுக்குள் அதிகளவு வாய்வை (gas) உற்பத்தி பண்ணக் கூடியவை. விமானம் அதிக உயரத்தில் பறக்கும்போது, கேபின் பிரஷர் காரணமாக வயிற்றுக்குள் வீக்கம் உண்டாகி, அதனால் அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்பாகிவிடும்.
2. பீன்ஸ் மற்றும் பயறு வகை உணவுகளில் நார்ச் சத்தும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் சத்துக்களும் அதிகம். இவை செரிமானப் பகுதியில் நீண்ட நேரம் தங்கி நொதிக்க ஆரம்பித்துவிடும். இதனால் வாய்வு உற்பத்தியும் வயிறு வீக்கமும் சாதாரணமாக நிகழும். விமானத்தின் குறுகிய இருக்கையில் அமர்ந்திருக்கும் போது அசௌகரியங்கள் அதிகமாகும்.
3. நுரைக்கும் தன்மை கொண்ட சோடா நீர், வயிற்றுக்குள் வாய்வு உற்பத்தியாக காரணமாகும். இந்த வாய்வு கேபின் பிரஷரால் அதிகரித்து வயிற்று வீக்கத்தை உண்டு பண்ணும். இதைத் தவிர்க்க பயணம் முழுவதும் சாதாரண தண்ணீரை அருந்தியபடி பயணிப்பது நலம்.
4. எண்ணெயில் பொரித்த அல்லது அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் செரிமானமாக அதிக நேரம் பிடிக்கும். இந்த வகை உணவுகளை உட்கொண்டபின் விமான பயணம் மேற்கொண்டால், குமட்டல் அல்லது வயிற்று அமிலம் தொண்டைக்குள் புகுவது போன்ற இடையூறுகள் உண்டாகி, பயணம் முழுக்க சோர்வுற்ற நிலையேற்பட வாய்ப்பாகிவிடும்.
5. ஆல்கஹால் அருந்திவிட்டு ஆகாயத்தில் பறப்பது அதி விரைவில் உடலின் நீர்ச்சத்தை குறைத்துவிடும். பயணத்தின் போது உறங்கவும் ஓய்வெடுக்கவும் ஆல்கஹால் அனுமதிக்காது. ஜெட்லாக் நிலையிலிருந்தும் சுலபமாக விடுபட முடியாது.
6. சுகர் ஃபிரீ சூயிங்கம் மற்றும் கேன்டிகளில், சோர்பிடால் (Sorbitol) என்ற சர்க்கரை கலந்த ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கும். இது வயிற்று உப்புசம், வாய்வு மற்றும் சில நேரங்களில் பேதியும் உண்டாகச் செய்யும்.
7. பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்த உணவுகளை உட்கொண்டால், வாய் மற்றும் உடலிலிருந்து துர்நாற்றம் வீசக் கூடிய வாய்ப்பு உருவாகும். குறுகிய இட வசதி கொண்ட விமானத்தில் பயணம் செய்வதற்கு முன், கடுமையான வாசனையுடைய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்த உணவுகளைத் தவிர்ப்பது நலம்.
8. அதிக ஸ்பைஸஸ் சேர்த்த உணவு நெஞ்செரிச்சல் வரவும், அமிலம் ரெஃபிளக்ஸ் (Reflux) ஆகவும் காரணமாகும். வயிற்றில் கோளாறுகளுடன் நடு வானில் பறப்பது நாகரீகமான செயலாகாது.
மேற்கூறிய உணவுகளை தவிர்த்து விட்டு விமானப் பயணத்தை அனுபவித்து ஆனந்தமடையலாமே!